வாஷிங்டன்: சீனாவுக்கான அமெரிக்கத் தூதராக முன்னாள் செனட்டர் டேவிட் பெர்டூவைத் தாம் தேர்ந்து எடுத்திருப்பதாக, அடுத்த மாதம் அதிபர் பதவி ஏற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“வட்டார அமைதியைக் கட்டிக்காக்கும் தமது உத்தியை டேவிட் பெர்டூ திறம்படக் கையாள்வார்.
“மேலும், சீனாவின் தலைவர்களுடனான உறவைப் பேணுவதில் ஆற்றலுடன் அவர் செயல்படுவார்,” என்று தமது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
2025 ஜனவரி 20ஆம் தேதி அதிபர் பதவியை ஏற்க உள்ள டிரம்ப், சீனாவின் இறக்குமதிப் பொருள்களுக்குக் கூடுதலாக 10 விழுக்காடு வரி விதிக்கப்போவதாகத் தெரிவித்து உள்ளார்.
போதையூட்டக்கூடிய ஃபென்டானில் (fentanyl) மருந்து அமெரிக்காவுக்குள் கடத்தி வருப்படுவதைத் தடுக்க சீனா இன்னும் கூடுதலாகச் செயல்படாவிட்டால் அந்த வரிவிதிப்பு உறுதியாகும் என்று அவர் நிபந்தனை விதித்து உள்ளார்.
டிரம்ப் ஏற்கெனவே தமது தேர்தல் பிரசாரத்தின்போது சீனாவின் பொருள்களுக்கு அதிகபட்சமாக 60 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று மிரட்டி இருந்தார்.