தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கல்வித்துறை இழுத்து மூடல்; உத்தரவு ஆவணத்தில் கையெழுத்திட இருக்கும் டிரம்ப்

2 mins read
929aaaa9-fc54-4fd2-8e27-3b7d9ef9d2fb
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவின் கல்வித்துறை இழுத்து மூடப்பட இருப்பதாக நம்பப்படுகிறது.

அதற்கான உத்தரவு ஆவணத்தில் அதிபர் டோனல்ட் டிரம்ப் வியாழக்கிழமை (மார்ச் 20) கையெழுத்திட இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கல்வித்துறை மூடப்படும் என்று அதிபர் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போது உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், கல்வித் துறை மூடப்படுவதைத் தடுக்க ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சில மாநில தலைமைச் சட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கல்வித்துறை இழுத்து மூடப்படுவதையும் அதன் ஊழியர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் பதவிநீக்கம் செய்யப்படுவதையும் தடுக்க அவர்கள் கடந்த வாரம் வழக்கு தொடுத்தனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் இல்லாமல் அரசாங்கத் திட்டங்கள் மற்றும் கல்விக் கழகங்களை மூட அதிபர் டிரம்ப்பும் அவரது ஆலோசகரும் பெருஞ்செல்வந்தருமான இலோன் மஸ்க்கும் முயன்று வருகின்றனர்.

அமைச்சரவை நிலை அமைப்பான கல்வித்துறையை இழுத்து மூட அதிபர் டிரம்ப் முயற்சி செய்வது இதுவே முதல்முறை.

இருப்பினும், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் கல்வித் துறையை மூட முடியாது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

அதில் 53 பேர் அதிபர் டிரம்ப்புக்கு ஆதரவானவர்கள்.

இருப்பினும், அமைச்சரவை நிலை அமைப்பை மூடுவது போன்ற மிக முக்கியமான நடவடிக்கை எடுக்க குறைந்தது 60 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தேவை.

எனவே, அதிபர் டிரம்ப்பின் இலக்கு நிறைவேற வேண்டுமாயின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

கல்வித்துறையை மூட ஆதரவு வழங்குவது தொடர்பான அறிகுறிகள் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து இதுவரை தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வித்துறை இழுத்து மூடப்பட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

அது அமெரிக்கர்களை ஏமாற்றி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள கல்வித்துறை மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களைக் கைவிட்டுவிட்டதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டது.

குறிப்புச் சொற்கள்