தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிப்ரவரி 15க்குள் பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் மோசமான விளைவுகள்: ஹமாஸுக்கு டிரம்ப் எச்சரிக்கை

2 mins read
4ecfa3e3-52a2-4f3a-b9f5-db92e3dfe486
காஸா சிட்டியில் போரால் சீரழிந்த உயர்நிலைப் பள்ளி. - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: காஸாவில் சிறை வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் சனிக்கிழமைக்குள் (பிப்ரவரி 15) விடுவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு நிகழவில்லை எனில் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிணைக்கைதிகள் அனைவரும் அந்தக் காலக்கெடுவுக்குள் விடுவிக்கப்படாவிட்டால் இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தத்தை தாம் ரத்து செய்யவேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

அடுத்தக்கட்ட பிணைக்கைதி பரிமாற்றத்தை ஒத்திவைக்கப்போவதாக ஹமாஸ் போராளிக்குழு மிரட்டியதைத் தொடர்ந்து, திரு டிரம்ப் அந்த விவகாரத்தில் தலையிட்டு உள்ளார்.

அடுத்தக்கட்ட பிணைக்கைதி பரிமாற்றம் சனிக்கிழமை நடைபெறத் திட்டமிட்டு இருந்தது. காஸாவில் உள்ள மூன்று இஸ்ரேலியர்களை ஹமாஸும் அதிகமான பாலஸ்தீனர்களை இஸ்ரேலும் அன்றைய தினம் விடுவிக்க வேண்டியது.

ஆனால், போர்நிறுத்த உடன்பாட்டின் நிபந்தனைகளை இஸ்ரேல் மீறிவிட்டதால் அந்தப் பரிமாற்றம் ஒத்தி வைக்கப்படுவதாக ஹமாஸ் குழுவின் ஆயுதப் பிரிவுப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் கூறிய இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், பிணைக்கைதி பரிமாற்றம் ஒத்தி வைக்கப்படுவதாக ஹமாஸ் அறிவித்திருப்பது அப்பட்டமான போர்நிறுத்த ஒப்பந்த மீறல் என்றார்.

இந்நிலையில், ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஹமாஸின் நடவடிக்கை அத்துமீறிய செயல். போர்நிறுத்தம் தொடர்பாக இனி என்ன நிகழ வேண்டும் என்பதை இஸ்ரேலின் முடிவுக்கே விடவேண்டி வரும்.

“என்னைப் பொறுத்தவரை, எல்லாப் பிணைக்கைதிகளும் சனிக்கிழமை 12 மணிக்குள் விடுவிக்கப்படவில்லை எனில், போர்நிறுத்தத்தை விலக்கிக்கொள்ள நான் உத்தரவிடுவேன். அதன் பின்னர் எல்லாவிதமான மோசமான விளைவுகளும் ஏற்படும்.

“ஒருவர், இருவர் என்றில்லாமல் அனைத்துப் பிணைக்கைதிகளும் காஸாவில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் நாடு திரும்ப வேண்டும் என்பதே எங்களது விருப்பம். போர்நிறுத்தத்தை இஸ்ரேல் இப்போதே மீறமுடியும் என்று நான் கருதினாலும் சனிக்கிழமை 12 மணி வரை கெடு விதித்துள்ளேன்,” என்று திரு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு காலக்கெடு விதித்திருப்பது குறித்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் பேச இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோசமான விளைவுகள் என்ன என்பதை திரு டிரம்ப் விரிவாகச் சொல்லாவிட்டாலும், அவை என்னவென்று ஹமாஸுக்குத் தெரியும் என்றார்.

“இந்த விவகாரத்தில் அமெரிக்கப் படைகளின் தலையீடு இருக்காது என்கிறீர்களா,” என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்