வாஷிங்டன்: பெருஞ்செல்வந்தர் இலோன் மஸ்க்குடனான தமது உறவு முறிந்துவிட்டதாகக் கூறிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், எதிர்க்கட்சியாகப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியினருக்கு திரு மஸ்க் நிதி அளித்தால் அவர் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.
அமெரிக்காவின் உள்நாட்டுப் பெருநிறுவன வரிகளையும் ராணுவச் செலவினத்தையும் மேலும் அதிகரிக்க முற்படும் மசோதா ஒன்றுக்கு எதிராக ஜனநாயகக் கட்சியினர் குரல்கொடுத்து வருகையில் திரு டிரம்ப்பின் எச்சரிக்கை வெளிவந்துள்ளது.
என்பிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் பின்விளைவுகள் என்னவென்பதைத் தெரிவிக்க திரு டிரம்ப் மறுத்துவிட்டார்.
திரு மஸ்க்கை விசாரிப்பது குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
டெஸ்லா, ஸ்பேஸ்-எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவராக உள்ள திரு மஸ்க்குடனான நட்பு முடிந்துவிட்டதா எனக் கேட்கப்பட்டதற்குத் திரு டிரம்ப், “ஆம் என நினைக்கிறேன்,” என்று கூறினார். அந்த உறவைச் சரிசெய்வதில் தமக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் கூறினார்.