வாஷிங்டன்: இஸ்ரேலியப் பிணைக்கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று காஸா மக்களிடம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதன்கிழமை (மார்ச் 5) வலியுறுத்தினார்.
அவ்வாறு செய்யாவிடில் நரக வேதனையை அனுபவிக்க வேண்டிவரும் என்று அவர் பாலஸ்தீனர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
அதுமட்டுமல்லாது, ஹமாஸ் அமைப்பின் தலைமை காஸாவிலிருந்து வெளியேற வேண்டும் என்றார் அதிபர் டிரம்ப்.
காஸா மக்களுக்கு மிக அழகிய எதிர்காலம் காத்திருப்பதாகக் கூறினார் அதிபர் டிரம்ப்,
ஆனால், இஸ்ரேலியப் பிணைக்கைதிகளை விடுவிக்க மறுத்தால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.
“அனைத்துப் பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். கொலையுண்ட பிணைக்கைதிகளின் உடல்களை உடனடியாக இஸ்ரேலிடம் ஒப்படைக்க வேண்டும். இத்துடன் உங்கள் கதை முடிந்துவிட்டது,” என்று ஹமாஸ் அமைப்புக்குச் செய்தி அனுப்பி வைத்தார் அதிபர் டிரம்ப்.
“இதுவே உங்களுக்கு விடுக்கப்படும் கடைசி எச்சரிக்கை. காஸாவிலிருந்து வெளியேற ஹமாஸ் தலைமைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வெளியேறினால் நல்லது.
“ஹமாஸ் அமைப்பை ஒட்டுமொத்தமாக முடித்துவைக்க இஸ்ரேலுக்குத் தேவையான அனைத்தையும் அனுப்பி வைக்க இருக்கிறேன். நான் சொல்வதைக் கேட்டு நடக்காவிட்டால் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த யாரும் உயிருடன் இருக்கமாட்டீர்கள்,” என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

