வாஷிங்டன்: கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதற்கான சாத்தியம் குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பும் அவரது குழுவினரும் விவாதித்ததாக செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) வெள்ளை மாளிகை கூறியது.
ஒரு நாட்டைக் கைப்பற்றும்போது ராணுவத்தைப் பயன்படுத்துவது எப்போதும் ஒரு தெரிவாக இருக்கும் என்று அதன் அறிக்கை குறிப்பிட்டது.
எட்டு அரசுரிமை நாடுகளைக் கொண்ட ஆர்க்டிக் வட்டாரத்தில் கிரீன்லாந்தை அமெரிக்காவின் உத்திபூர்வ மையமாக உருவாக்க திரு டிரம்ப் திட்டமிடுகிறார். ஏற்கெனவே ரஷ்யாவும் சீனாவும் ஆர்க்டிக் வட்டாரத்தில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், முந்திக்கொள்ள விரும்புகிறது அமெரிக்கா.
வெனிசுவேலா அதிபரைக் கைது செய்த பின்னர் கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.
போதைமருந்து கடத்துவதாகக் கூறி வெனிசுவேலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் அமெரிக்கப் படைகள் பிடித்துச் சென்றன.
அமெரிக்காவின் அந்தச் செயலுக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் திரு டிரம்ப் அதனை கண்டுகொள்ளவில்லை.
அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வெனிசுவேலா இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். இருப்பினும், வெனிசுவேலாவை அமெரிக்கா நிர்வகிக்கும் என டிரம்ப் கூறி வருகிறார்.
“பாதுகாப்பான, முறையான, நியாயமான மாற்றத்தை செய்யும்வரையில் அமெரிக்கா வெனிசுவேலாவை நிர்வகிக்கும்,” என்று திரு டிரம்ப் ஃபுளோரிடாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வெனிசுவேலாவை அடுத்து கொலம்பிய அதிபர் பெட்ரோவுக்கு திரு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதனால் கொலம்பியாயைக் கைப்பற்ற அவர் முற்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.
ஆயினும், டிரம்ப்பின் எச்சரிக்கை பற்றி கவலைப்படப்போவதில்லை என பெட்ரோ கூறிவிட்டார்.
இதனிடையே, டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமாக கிரீன்லாந்து விளங்குகிறது.
இங்கு அரியவகை தாதுப் பொருள்கள் கொட்டிக்கிடக்கின்றன. இந்தப் பகுதியை 2020ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரிமை கோரி வருகிறார். ஆனால், இதற்கு டென்மார்க் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
வெனிசுவேலா மீது ராணுவ நடவடிக்கை எடுத்துள்ளதால், கிரீன்லாந்து மீதும் திரு டிரம்ப் நடவடிக்கை எடுப்பார் என்ற அச்சம் டென்மார்க்கில் பரவி வருகிறது.
இந்நிலையில், கிரீன்லாந்து அந்நாட்டு மக்களுக்குச் சொந்தமானது என்று ஐரோப்பியத் தலைவர்கள் ஒரே குரலாக ஒலித்து வருகின்றனர்.

