ஜெட்டா: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், காஸாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அப்பகுதிவாசிகளை இடம் மாற்றும் திட்டத்தை அண்மையில் முன்வைத்தார்.
சர்ச்சையை ஏற்படுத்திய அத்திட்டத்தைக் கையாள மாற்றுத் திட்டம் ஒன்றை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) அங்கீகரித்துள்ளதாக அமைச்சர்கள் இருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். அந்த மாற்றுத் திட்டத்தை அரபு லீக் அமைப்பு முன்வைத்தது.
57 உறுப்பு நாடுகள்/பகுதிகளைக் கொண்ட ஓஐசி, சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அவசரமாக ஒன்றுகூடியபோது இம்முடிவு எடுக்கப்பட்டது. எகிப்து தலைநகர் கெய்ரோவில் அரபு லீக் மாற்றுத் திட்டத்தை அங்கீகரித்தது; அதற்கு முன்று நாள்களுக்குப் பிறகு ஓஐசி அங்கீகரித்தது.
எகிப்து வரைந்திருக்கும் மாற்றுத் திட்டத்தின்கீழ், வருங்காலத்தில் பாலஸ்தீன அரசாங்கத்தின் தலைமையில் காஸா பகுதியை மறுசீரமைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
“அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அமைச்சர்நிலைச் சந்திப்பில் எகிப்து வரைந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்போது அத்திட்டம் அரபு-இஸ்லாமிய திட்டமாக உருவெடுத்துள்ளது,” என்று எகிப்திய வெளியுறவு அமைச்சர் பாடர் அப்தலாட்டி கூறினார். சூடான் வெளியுறவு அமைச்சரும் அதே கருத்தை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இது நிச்சயமாக மிகவும் சாதகமான ஒன்று,” என்றார் திரு அப்தலாட்டி.
காஸாவை அமெரிக்கா தனது கட்டுக்குள் கொண்டுவந்து அதை மத்திய கிழக்கின் கடற்கரை வட்டாரமாக (Riviera of the Middle East) மாற்றலாம் என்று திரு டிரம்ப் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து காஸாவாசிகளை எகிப்து அல்லது ஜோர்தானுக்கு இடம் மாற்றலாம் என்றும் அவர் சொன்னார்.
திரு டிரம்ப்பின் அக்கருத்துக்கு உலகளவில் கண்டனக் குரல் எழுந்தது.
தொடர்புடைய செய்திகள்
காஸாவின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு நிதி வழங்க அறநிதி ஒன்றைத் தொடங்கப்போவதாகவும் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) கெய்ரோவில் நடந்த சந்திப்பில் அரபு நாட்டுத் தலைவர்கள் அறிவித்தனர். அந்த அறநிதிக்கு ஆதரவளிக்குமாறு அவர்கள் அனைத்துலக சமூகத்தைக் கேட்டுக்கொண்டனர்.