டிரம்ப்பின் பதவியேற்பு: உயர்நிலைத் தூதரை அனுப்பவுள்ள ஸி ஜின்பிங்

2 mins read
fdd06ed4-1ec3-4d0e-b8a8-60dc91774e1b
திரு ஸி ஜின்பிங் துணை அதிபர் ஹான் ஸெங் அல்லது வெளியுறவு அமைச்சர் வாங் யியை அனுப்பக்கூடும் என்று அறிக்கை கூறியது. - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் வரும் ஜனவரி 20ஆம் தேதி டோனல்ட் டிரம்ப்பின் பதவியேற்பு விழாவுக்கு சீன அதிபர் ஸி ஜின்பிங் தமது சார்பாக உயர்நிலைத் தூதர் ஒருவரை அனுப்பவிருப்பதாக ‘ஃபைனான்‌‌ஷல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

டிரம்ப் அழைப்பு விடுத்த திரு ஸிக்குப் பதிலாக அந்த உயர்நிலைத் தூதர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார் என்று பெய்ஜிங், டிரம்ப் குழுவிடம் தெரிவித்ததாக அறிக்கை கூறியது.

அந்தத் தூதர் டிரம்ப்பின் குழுவுடன் பேச்சு நடத்துவார் என்றும் அது தெரிவித்தது.

சில சமயங்களில் சடங்குபூர்வ நிகழ்வுகளில் அவருக்குச் சார்பாகக் கலந்துகொள்ளும் துணை அதிபர் ஹான் ஸெங் அல்லது வெளியுறவு அமைச்சர் வாங் யியை திரு ஸி அனுப்பக்கூடும் என்று அறிக்கை குறிப்பிட்டது.

டிரம்ப் கடந்த டிசம்பரில் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள திரு ஸிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும், அமெரிக்கப் புவிஅரசியல் எதிரியான சீனாவின் தலைவர் ஒருவர், அமெரிக்க அதிபர் பதவியேற்பில் இதுவரை கலந்துகொண்டதில்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர். அது அரசியல் நாடகம் என்றும் அவர்கள் கூறினர்.

திரு ஸியும் தாமும் பிரதிநிதிகள் மூலம் பேசிக்கொண்டிருப்பதாகவும் இரண்டாம் தவணையில் அவர்கள் இருவரின் உறவும் மேம்படும் என்று தாம் நம்புவதாகவும் டிரம்ப் ஜனவரி 6ஆம் தேதி கூறினார்.

இவ்வாரம் டிரம்ப்பின் கருத்துகளுக்கு பெய்ஜிங் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் சீன - அமெரிக்கப் பொருளியல், வர்த்தக விவகாரங்களுக்கு நிலையான, ஆரோக்கியமான, நீடித்த மேம்பாட்டை ஊக்குவிக்க விரும்புவதாகவும் சீன வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்