அன்தால்யா: துருக்கியின் அந்தால்யா நகரில் நடந்துவரும் காப்31 மாநாட்டில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியுடன் (ஏஐஐபி) அந்நாடு அதன் பருவநிலை சார்ந்த கொள்கைமாற்ற திட்டங்களுக்கு உதவ S$2.06 பில்லியன் நிதிக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
அதன்படி பருவநிலை மாற்றத்துக்கான இலக்குகளை எட்டுவதற்கான முதலீடுகளை துருக்கி ஈர்க்க முடியும் என்று வங்கி தெரிவித்தது.
ஏஐஐபி அமைப்பின் நிறுவன நாடுகளில் ஒன்றான துருக்கிக்கு பருவநிலை மாற்ற செயல்பாடுகளுக்கான முதலீட்டுக்கென கூடுதலாக கிட்டத்தட்ட $87.37 மில்லியன் 2030ஆம் ஆண்டுக்குள் தேவைப்படும். அவற்றில் பாதியை அது தனியார் அமைப்புகளுடன் பெறவேண்டியிருக்கும். அதனை இரண்டு வாரங்கள் நடக்கும் பருவநிலை மாநாட்டின் நான்காம் நாளான வியாழக்கிழமை (நவம்பர் 12) வங்கி விளக்கியது.
நிதிக்கொள்கை, நிதித்துறை ஒழுங்குமுறை, துறைசார் திட்டவடிவமைப்பு போன்ற அம்சங்களில் ஒப்பந்தம் ஆதரவு வழங்கும். துருக்கியின் பருவநிலை சட்ட அமலாக்கம், புவியின் வெப்பத்தை அதிகரிக்கும் வெளிப்பாடுகளை தடுத்தல் போன்ற செயல்முறைகளில் ஒப்பந்தம் உதவும்.
இவற்றை அடைய தற்காலிக இலக்காக 2035ஆம் ஆண்டு அமையும். மேலும் 2053ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றத்தின் ஒட்டுமொத்த நிகர அளவாக 0 என்பதை எட்டவும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
நிலையான நிதி இருப்பை எட்டவும், கரிம வெளியேற்றத்தை தடுக்கும் செயல்பாடுகளை முடுக்கிவிடவும், பருவநிலை மீள்திறன் முயற்சியை 86 மில்லியன் மக்கள்தொகை கொண்ட துருக்கியில் நாடுதழுவிய அளவில் ஊக்குவிக்கவும் அந்த நிதி பயன்படுத்தப்படும். புவி வெப்பமடைவதால் உலகெங்கும் வறட்சி, வெள்ளம், கட்டுக்கடங்காத காட்டுத்தீ போன்ற இயற்கை இடர்கள் அதிகரித்துவரும் வேளையில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
ஏஐஐபி அமைப்பு பருவநிலை கொள்கை அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு வழங்கிய ஆக அதிக நிதியாக இது அமைகிறது என்று அதன் தலைமை முதலீடு அதிகாரி கொன்ஸ்டன்டின் லிமிடொவ்ஸ்கி கூறினார்.
பருவநிலை கட்டுப்பாட்டுக்கென கடந்த 2025ல் மட்டும் ஏஐஐபி மொத்தம் S$9.6 பில்லியன் நிதி உதவி வழங்கியுள்ளது.
