பினாங்கு தைப்பூசத்துக்குப் பின் நிகழ்ந்த பலூன் வெடிப்பில் இருவர் காயம்

பினாங்கு தைப்பூசத்துக்குப் பின் நிகழ்ந்த பலூன் வெடிப்பில் இருவர் காயம்

1 mins read
ddb807be-1cb7-4fe1-92a9-0419373a0159
பினாங்கில் உரிமம் இல்லாத வெளிநாட்டவர் எளிதில் தீப்பற்றக்கூடிய ஹைட்ரஜன் வாயு நிரம்பிய பலூன்களை விற்றதாக நம்பப்படுகிறது. - படம்: த ஸ்டார்

ஜார்ஜ் டவுன்: பினாங்கின் தைப்பூசக் கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த ஒரு பலூன் வெடிப்புச் சம்பவத்தில் பினாங்கு தீவு நகர மன்றத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் காயமுற்றனர்.

ஜாலான் கெபுன் பூங்கா என்ற பகுதியிலிருந்து வர்த்தகர் ஒருவரிடமிருந்து அந்தப் பலூன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நகர மன்றத்தின் ‘பிக்கப் வாகனத்திலிருந்து அந்தப் பலூன்கள் இறக்கப்பட்டபோது சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

தைப்பூசக் கொண்டாட்டம் முடிந்து பல்வேறு கடைகளின் பொருள்களை உரிமையாளர்கள் எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) நிகழ்ந்தது.

பலூன் கடையை நடத்திய கடைக்காரர் வெளிநாட்டினர் என்று நம்பப்படுகிறது. அவரிடம் கடையை நடத்துவதற்கான உரிமமும் இல்லை.

ஹீலியம் வாயுவைவிட மலிவாகக் கிடைக்கக்கூடிய ஹைட்ரஜன் வாயுவால் பலூன்கள் அனைத்தும் நிரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹைட்ரஜன் வாயு எளிதில் தீப்பற்றக்கூடியது. ஹீலியம் வாயு தீப்பற்றாதது. பொதுமக்களுக்கும் பாதுகாப்பானது.

பலூன்கள் நிறைந்த வாகனம் ஒன்று தீப்பற்றி எரியும் காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பரவியது. அதில் பலர் தீயணைப்பானைப் பயன்படுத்தி தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர்.

பினாங்கு தீவு நகர மன்ற மேயர் திரு ராஜேந்திரன் சம்பவம் நிகழ்ந்ததை உறுதிசெய்தார். பலூன் வெடித்ததில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்