ஹாங்காங்: சீனாவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த புயலான ‘பவி’ புயல் காரணமாக, அந்நாட்டின் வடகிழக்கு லியோனிங் மாகாணத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 2,60,000க்கும் மேற்பட்டோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
புயல் மணிக்கு 144 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று, மழையுடன் சீனக் கடற்கரையைக் கடந்தது. அதன் தாக்கத்தால் லியோனிங் மாகாணம் முழுவதும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
புயல் நிலப்பரப்பைக் கடந்த பிறகு படிப்படியாக வலுவிழந்து வெப்பமண்டலப் புயலாக மாறிய போதிலும், நாட்டின் கிழக்கு, வடக்குப் பகுதிகளில் இன்னும் சில நாள்களுக்குத் தீவிர மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சீனாவைத் தாக்குவதற்கு முன், பவி புயல் பிலிப்பீன்ஸ், தைவான், ஜப்பானின் தென்மேற்குத் தீவுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

