பெய்ஜிங்: ‘டால்ஃபின்’ சூறாவளி சீனாவின் கிழக்குக் கடலோரம் கரைகடந்துள்ளது.
கனமழையுடன் பலத்த காற்று அங்கு வீசிவருகிறது. இந்நிலையில், கிழக்குச் சீனாவில் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
முன்னதாக, ‘டால்ஃபின்’ புயல் ஜப்பானின் தெற்கே உள்ள ஒக்கினாவா மாகாணத்தைக் கடந்து சென்றதில், ஆறு பேர் காயமடைந்தனர்; 50,000க்கும் மேற்பட்ட கட்டடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சீனாவில் புயல் கரையைத் கடப்பதற்கு முன்பு, அதிகாரிகள் கடல்துறையில் பணியாற்றுவோரைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்தனர்.
கப்பல்களை மீண்டும் துறைமுகங்களுக்குத் திரும்புமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் நீர்த்தேக்கங்கள், மலைப் பகுதிகளில் உள்ள நீரோடைகள், நிலச்சரிவு அபாயம் உள்ள வட்டாரங்கள், கட்டுமானத் தளங்கள், சுற்றுலாத்தலங்களில் கண்காணிப்பையும் சோதனைகளையும் அவர்கள் தீவிரப்படுத்தினர்.
புயல் வலுவிழந்து நிலப்பகுதிக்குள் செல்வதற்கு முன்பு, மணிக்கு 162 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் திங்கட்கிழமை வரை இந்தச் சூறாவளியின் தாக்கம் நீடிக்கும் என்று சீனாவின் தேசிய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.
ஷாங்காயின் முக்கியப் பயணிகள் விமான நிலையங்கள் இரண்டிலிருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் கிட்டத்தட்ட 1,400 விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) ரத்துச் செய்யப்பட்டதாக அரசாங்க ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி தெரிவித்தது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஞாயிற்றுக்கிழமை ஷாங்காய் நகருக்கு வந்துசெல்லும் எட்டு விமானங்களை ரத்துச் செய்துள்ளது; மேலும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ஷாங்காய்க்குப் புறப்படும் மற்றும் அங்கிருந்து வரும் 10 விமானங்களின் பயண நேரத்தை மாற்றியமைத்துள்ளது.


