பெய்ஜிங்: த‘நௌல்’ புயலின் தொடர் தாக்கம் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 28) சீனாவின் தெற்கு, மத்திய மாநிலங்களுக்குள் ஊடுருவின. இதனால் அப்பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. வலுவிழந்த புயல், வழக்கத்தைவிட நீண்ட காலம் நிலப்பகுதியில் நீடிக்கக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால் ஃபூஜியான், குவாங்டோங், ஜியாங்சி, ஹூனான், ஹூபெய், ஹெனான், குவாங்சி ஆகிய மாநிலங்களில் வியாழக்கிழமைவரை கனமழை பெய்யக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மலைப்பகுதிகள் வழியாக வடக்குத் திசையை நோக்கிச் செல்லும் புயலின் பாதை, நிலச்சரிவு மற்றும் பிற பேரிடர் அபாயங்களை உயர்த்தக்கூடும் எனச் சீன அரசு ஊடகங்கள் எச்சரித்தன.
கடந்த வார இறுதியில் குவாங்டோங் மாநிலத்தில் கரையைத் தொடுவதற்குமுன் ‘நௌல்’ புயல் தீவிரமடைந்தது. இந்த ஆண்டில் சீனாவைத் தாக்கிய மிக வலிமையான புயல் இதுவேயாகும்.
புயல் மற்றும் வெள்ளப் பெருக்கு அபாயங்களை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள சீன அதிகாரிகள் தயார்நிலை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். அவசரகால, வீடமைப்பு அமைச்சு அதிகாரிகள், வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டனர். முக்கிய உள்கட்டமைப்புகளைப் பரிசோதிக்கவும் ஆபத்தான பகுதிகளில் மீட்புக் குழுக்களையும் சாதனங்களையும் முன்கூட்டியே தயார்நிலையில் வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

