லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவில் குடிநுழைவுச் சோதனையின் தொடர்பில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் செயல்படும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கையாள 2,000 ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு லாஸ் ஏஞ்சலிஸிலுள்ள பேரமவுண்ட் வட்டாரத்தில் பாதுகாப்பு அதிகாரிகள், கிட்டத்தட்ட 100 ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர், மெக்சிகோ கொடிகளை ஏந்தியிருந்தனர். வேறு சிலர், மூச்சுக் கவசங்களை அணிந்திருந்தனர்.
ராணுவ வீரர்களை அனுப்பும் முடிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜூன் 7 மாலையில் அறிவித்திருந்தார்.
ஆர்ப்பாட்டங்கள் நீடித்தால் அவர்களைக் கட்டுப்படுத்த மற்ற படைகளிலிருந்தும் வீரர்களை வரவழைக்க அரசாங்கம் தயங்காது என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் குடிநுழைவுக் கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப்படும் இடம், ஜனநாயாகக் கட்சியினரால் நிர்வகிக்கப்படுகிறது. அங்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் தென்னமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
பச்சை நிறச் சீருடை அணிந்திருந்த வீரர்கள் பலர், மூகக் கவசங்களை அணிந்து கொண்டு, குப்பை இறைந்திருந்த சாலையில் வலம் வருவதைக் காணொளிகள் காட்டுகின்றன. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கக் கண்ணீர்ப் புகை பீய்ச்சப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒருசிலரை வீரர்கள் தடுத்துவைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
“ராணுவத்தினர் எங்கு சென்றாலும் மக்களின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டும்,” என்று 44 வயது ஆர்ப்பாட்டக்காரர் ரோன் கோச்செஸ் தெரிவித்தார்.
குடிநுழைவுச் சட்டங்களை மீறியது தொடர்பில் 44 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து வெள்ளிக்கிழமை இரவு ஆர்ப்பாட்டம் வெடித்தது.
இதனை அடுத்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கலிஃபோர்னியா மாநிலத்தின் ஆளுநர் கெவின் நியூசொம், ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டார். .