வாஷிங்டன்: அமெரிக்காவில், புதன்கிழமை (நவம்பர் 4) ஜனநாயகக் கட்சியினர் செனட் சபையிலும் மக்களவையிலும் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளனர்.
பல மில்லியன் வாக்காளர்கள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்குக் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், குடியரசுக் கட்சியின் கோட்டைகளிலும் ஜனநாயகக் கட்சியினர் அந்த வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.
ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அலையின் முழுமையான பரிமாணமும் தாக்கமும் இன்னும் முழுமையாகத் தெரியவராதபோதிலும், சவுத் கெரலைனா, டெக்சாஸ், அயோவா போன்ற பழைமைவாதக் கோட்டைகள் உட்பட நீண்ட காலமாக எட்ட முடியாததாகக் கருதப்பட்ட மாநிலங்களிலும் அக்கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.
டிரம்ப் நாட்டின் பொருளியலை வழிநடத்திய விதம் குறித்தும் பிப்ரவரியில் ஈரான்மீது போர் தொடுக்கும் அவரது முடிவால் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்தது குறித்தும் வாக்காளர்கள் அடைந்த ஆழ்ந்த அதிருப்தியை ஜனநாயகக் கட்சியின் வெற்றி எடுத்துக்காட்டுவதாகக் கூறப்படுகிறது.
பல்வேறு தேர்தல் கருத்துக்கணிப்புகளிலும் வாக்காளர்கள் வாழ்க்கைச் செலவினங்கள் குறித்துத் தங்களின் கவலையையும் அப்பிரச்சினையை டிரம்ப் கையாண்ட விதம் குறித்துத் தங்களின் கோபத்தையும் வெளிப்படுத்தினர்.
கென்சசில், தேவாலயப் பாதிரியாரான ஆடம் ஹாமில்டன், கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஏற்பட்ட பெரும் பொருளியல் மந்தநிலைக்குப் பிறகு செனட் இடத்தை வென்ற முதல் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.
ஒஹாயோவில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துணை அதிபர் ஜே.டி.வேன்சுக்குச் சொந்தமாக இருந்த செனட் இடத்தை ஜனநாயகக் கட்சியின் ஷெர்ரோட் பிரௌன் கைப்பற்றினார்.
அதேவேளையில் டெக்சாசில், ஜனநாயகக் கட்சி மாநிலப் பிரதிநிதி ஜேம்ஸ் தலாரிகோ தமக்கு எதிராகக் குவிக்கப்பட்ட பெரும் நிதிச் செலவினங்களை எதிர்கொண்டு, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய குடியரசுக் கட்சித் தலைமைச் சட்ட அதிகாரி கென் பாக்ஸ்டனைத் தோற்கடித்தார்.
கடந்த 2024ஆம் ஆண்டில் ஒஹாயோ, டெக்சாஸ் ஆகிய இரண்டு மாநிலங்களுமே டிரம்பிற்கு ஈரிலக்க வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித்தந்தவை.
மேலும், 2024ஆம் ஆண்டுத் தேர்தலில் டிரம்ப் கிட்டத்தட்ட 18 விழுக்காட்டுப் புள்ளி வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சவுத் கெரலைனாவில், குழந்தை நல மருத்துவரான ஆனி அன்ட்ரூஸ் குடியரசுக் கட்சி செனட்டர் டார்லின் கிராஹமைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடினார். டார்லின் தமது சகோதரர் செனட்டர் லின்ட்சே கிராஹமின் மறைவுக்குப் பிறகு, அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
