பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், உக்ரேனியப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் தீவிரமாக உள்ளார்.
இதற்காக அவர் எடுத்து வரும் முயற்சிகளுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் பிப்ரவரி 20ஆம் தேதி ‘ஜி20’ நாடுகளின் சந்திப்பில், உக்ரேனிய போருக்கு முடிவுகட்ட ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்வதற்கான அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் முயற்சிக்கு ஆதரவு அளிப்பதாக சீனா தெரிவித்தது.
ஆனால் அமெரிக்காவின் நட்பு நாடுகள் அந்த முயற்சிக்கு எதிராக உக்ரேனிய அதிபர் வொலேடிமிர் ஸெலன்ஸ்கிக்கு ஆதரவாக அணிவகுத்துள்ளன.
திரு டிரம்ப் தாம் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே அமெரிக்க கொள்கைக்கு மாறாக தொலைபேசியில் பேசி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை தனிமைப்படுத்தும் பிரசாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார். அதே சமயத்தில் உக்ரேனை ஓரங்கட்டி போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து அமெரிக்க, ரஷ்ய அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
இதனால் ஸெலன்ஸ்கி ஆத்திரமடைந்துள்ளார். இதற்கு ஐரோப்பிய நாடுகளும் அவருக்கு தூபம் போட்டு பிரச்சினையை ஊதி பெரிதாக்கி வருகின்றன.
திரு டிரம்ப், பிப்ரவரி 19ஆம் தேதி ஸெலன்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி எனக் குறிப்பிட்டதால் ‘ஜி20’ அமைப்பில் அங்கம் வகிக்கும் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உக்ரேனிய அதிபருக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் டிரம்பின் முயற்சிக்கு ஆதரவு அளிக்க சீனா முன்வந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“அண்மையில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே எட்டப்பட்ட கருத்திணக்கம் உட்பட உக்ரேனியப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் அனைத்து முயற்சிகளுக்கும் சீனா ஆதரவளிக்கும்,” என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இதர ‘ஜி20’ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடம் தெரிவித்ததாக வாங் யியின் அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
இந்த விவகாரத்தில் தொடர்ந்து சீனா ஆக்ககரமாகச் செயல்பட விரும்புவதாகவும் அது கூறியது.
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ஜெர்மனியின் முனிக் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் ரஷ்ய-உக்ரேனிய அமைதி பேச்சில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பங்காற்ற வேண்டும் என்று திரு வாங் யி அழைப்பு விடுத்திருந்தார்.

