ஈரானின் மலிவுவிலை ஆளில்லா வானூர்திகள் (டிரோன்) வளைகுடா வட்டாரத்தில் அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளின் ராணுவத் தளங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
கிட்டத்தட்ட $20,000 முதல் $30,000 மதிப்புள்ள இந்தத் தற்கொலை படை ஆளில்லா வானூர்திகளை வீழ்த்த, அமெரிக்கா பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளைப் பயன்படுத்தி வந்தது.
இந்த நிதிச் சுமையைக் குறைக்க, தற்போது உக்ரேன் வளைகுடா நாடுகளுக்குக் கைகொடுக்க முன்வந்துள்ளது.
ரஷ்யாவுடனான போரில் கடந்த நான்கு ஆண்டுகளாக இத்தகைய ஆளில்லா வானூர்திகளை எதிர்கொண்ட அனுபவம் உக்ரேனுக்கு உண்டு. அதனால், உக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு கத்தார், சவூதி அரேபியாவில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. உக்ரேன் தனது ‘ஸ்டிங்’, ‘புல்லட்’ போன்ற மலிவான ஆளில்லா வானூர்தி தடுப்பான்களை (Interceptors) வளைகுடா நாடுகளுக்கு வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
மலிவு விலையில் டிரோன்களை வீழ்த்தும் உக்ரேனிய தீர்வு
அமெரிக்காவின் ஒரு ‘பேட்ரியாட்’ ஏவுகணை $4 மில்லியன் செலவாகும் நிலையில், உக்ரேனின் ‘ஸ்டிங்’ தடுப்பான்கள் மிகக் குறைந்த செலவில் 70-90 விழுக்காடு வெற்றியைத் தருகின்றன. இவை மணிக்கு 340 கி.மீ வேகத்தில் சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டவை. குறிப்பாக, இலக்கைக் கண்டறியத் தவறினால் இவை மீண்டும் தளம் திரும்பும் வசதி கொண்டவை.
ஜோர்தான், குவைத் நாடுகளுக்கு ஏற்கெனவே 200க்கும் மேற்பட்ட உக்ரேனிய ஆளில்லா வானூர்தி நிபுணர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
அதிநவீன ஏவுகணைகளுக்குப் பதிலாக, உக்ரேனின் இந்த தொழில்நுட்பத்தை வளைகுடா நாடுகள் பெரிதும் நம்பியுள்ளன. இதன் மூலம், போர்க்கள அனுபவத்தைக்கொண்டு உலக அரங்கில் உக்ரேன் தனது புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை நிலைநாட்டியுள்ளது.

