தொப்புள்கொடி வியாபாரம்: பாகிஸ்தானில் ரகசிய கும்பலிடம் விசாரணை

தொப்புள்கொடி வியாபாரம்: பாகிஸ்தானில் ரகசிய கும்பலிடம் விசாரணை

2 mins read
efa689ff-231d-450f-9e81-8619ae5c73a8
மருத்துவமனைகளிலிருந்து தொப்புள்கொடிகளை வாங்கியதாகக் கூறப்படும் ஐவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். - படம்: பாகிஸ்தான் புலனாய்வுத் துறை

இஸ்லாமாபாத்: முதுமையைத் தடுக்கும் ஊசி மருந்துகளைத் தயாரிப்பதற்காக, மருத்துவமனைகளில் இருந்து மனித தொப்புள்கொடிகளை கடத்துவதாகக் கூறப்படும் ரகசியக் கும்பல் குறித்து பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருவதாக பிபிசி ஜூலை 3ஆம் தேதி தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் உள்ள சட்டவிரோதப் பதப்படுத்தும் நிலையம் ஒன்றில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், மனித தொப்புள்கொடி என நம்பப்படும் 500 கிலோ எடையுள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொப்புள்கொடியைச் சேமித்து பதப்படுத்துவதற்காகவே மாற்றப்பட்ட ஒரு வீட்டில் தள்ளுவண்டிகளில் உலர்த்தப்பட்ட தொப்புள்கொடிகள் தட்டுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை அந்தப் புலனாய்வு அமைப்பு பகிர்ந்துள்ளது.

இதற்கிடையே, கடந்த ஜூலை 1ஆம் தேதி இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் வியட்னாமுக்குக் கடத்தப்படவிருந்த 100 கிலோ தொப்புள்கொடி அடங்கிய பொட்டலத்தையும் அதிகாரிகள் இடைமறித்துக் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் இஸ்லாமாபாத், ராவல்பிண்டியில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து ஒரு தொப்புள்கொடியை சுமார் 800 ரூபாய்க்கு (3.72 சிங்கப்பூர் வெள்ளி) வாங்கியதாக மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வாரியத்தின் அதிகாரியான ஹினா கான்வால் தெரிவித்ததாக பிபிசி குறிப்பிட்டது.

இந்தக் கும்பல் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து மாதந்தோறும் 200 கிலோ தொப்புள்கொடிகளை வாங்கி, அவற்றை உலர்த்திப் பதப்படுத்திய பின்னர் வெளிநாடுகளுக்குக் கடத்தி வந்ததாக எஃப்ஐஏ அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆரம்பத்தில் அவை ஆடுகளின் தொப்புள்கொடி என்று சந்தேக நபர்கள் தெரிவித்தாலும் தீவிர விசாரணைக்குப் பிறகு அவை மனித தொப்புள்கொடிதான் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

ஒவ்வொன்றும் 700,000 ரூபாய் மதிப்புள்ள முதுமையைத் தடுக்கும் ஊசி மருந்துகளின் தயாரிப்புக்காகவே இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்ததாக எஃப்ஐஏ குறிப்பிட்டுள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“இந்தக் கும்பலின் சட்டவிரோதச் செயல்பாடுகள் தலைநகரையும் தாண்டி லாகூர், பெஷாவர், ராவல்பிண்டி போன்ற இதர முக்கிய நகரங்களுக்கும் பரவியிருக்கலாம் என புலனாய்வு அமைப்பு கருதுகிறது,” என்று பிபிசி மேலும் தெரிவித்தது.

இக்குற்றச்சாட்டுகளுக்குத் துணையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் குடிநுழைவு அதிகாரிகள், கழிவு நிர்வாக நிறுவனங்கள், மருத்துவமனைகளையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வணிக நோக்கங்களுக்காக மனித உறுப்புகளைச் சேகரிப்பது பாகிஸ்தானில் சட்டப்படி குற்றமாகும். இதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஒரு மில்லியன் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்