நஜிப் விவகாரத்தில் தலைமைச் சட்ட அதிகாரி பதவி விலகவேண்டும்: அம்னோ இளையர் பிரிவு

நஜிப் விவகாரத்தில் தலைமைச் சட்ட அதிகாரி பதவி விலகவேண்டும்: அம்னோ இளையர் பிரிவு

படம்: மலாய் மெயில்

08 Nov 2026 - 6:15 pm

2 mins read

ஜோகூர் பாரு: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு, தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருப்பதாக மாமன்னர் கூறியதைத் தொடர்ந்து ஜோகூர் அம்னோ கட்சியின் இளையர் பிரிவின் கவனம் தலைமைச் சட்ட அதிகாரிமீது திரும்பியுள்ளது.

செப்டம்பர் 18ஆம் தேதி மன்னிப்பு வாரியம் எவ்வாறு முடிவெடுத்தது என்பதற்குத் தலைமைச் சட்ட அதிகாரி விளக்கம் அளிக்கவேண்டும் என்று ஜோகூர் இளையர் பிரிவின் தலைவர் நூர் அஸ்லீன் அம்ப்ரோஸ் கூறியதாக ‘த ஸ்டார்’ நாளேடு சொன்னது.

திரு நஜிப்பின் விவகாரத்தில் மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் எடுத்த உறுதியான முடிவை ஜோகூர் அம்னோ இளையர் பிரிவு முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் சொன்னார்.

மத்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப மாமன்னர் தமது கடமைகளையும் பொறுப்புகளையும் மேற்கொண்டதாக அரண்மனை அறிக்கை வெளியிட்டது என்று திரு நூர் அஸ்லீன் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து திரு நஜிப்பின் விவகாரம் கையாளப்பட விதம் குறித்து திரு நூர் அஸ்லீன் வருத்தம் தெரிவித்தார். தலைமைச் சட்ட அதிகாரியின் நடவடிக்கை கவனக்குறைவானது என்ற அவர், மன்னிப்பு வாரியத்தின் தீர்மானத்தைப் புறந்தள்ளும் முயற்சியாக அது கருதப்படும் என்றார்.

கவனக்குறைவாக எடுக்கப்பட்ட தீர்மானத்துக்காகவும் அதை நிறைவேற்ற முயற்சி செய்ததற்காகவும் தலைமைச் சட்ட அதிகாரி பொறுப்பேற்கவேண்டும் என்ற திரு நூர் அஸ்லீன், பதவியிலிருந்து அவர் கௌரவமாக விலகிவிடவேண்டும் என்றார்.

காவல்துறையிடம் தலைமைச் சட்ட அதிகாரிமீது புகார் அளிக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும் அந்தத் தகவலை உறுதிசெய்ய முடியவில்லை.

தலைமைச் சட்ட அதிகாரி பதவி விலகுவதன் மூலம் விசாரணைகள் அனைத்தும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடைபெற வழிவகுக்கும் என்று திரு நூர் அஸ்லீன் சொன்னார்.

செப்டம்பர் 18ஆம் தேதி, எஞ்சியுள்ள தண்டனைக் காலத்தை வீட்டிலிருந்து நிறைவேற்றுவதற்கான நிபந்தனையுடன் கூடிய அனுமதி திரு நஜிப்பிற்கு வழங்கப்பட்டது.

வீட்டுக்காவலில் இருக்க திரு நஜிப் 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்