பாரிஸ்: கடந்த 2015ஆம் ஆண்டில் ஏறத்தாழ 200 நாடுகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒன்றுகூடி பருவநிலை மாற்றத்துக்கெனவும் கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் ஒப்பந்தம் செய்துகொண்டன.
அதன்படி, ஒவ்வொரு நாடும் வெளியேற்றும் அளவுகடந்த கரியமில வாயுவுக்கு ஈடாக மற்ற நாடுகளில் அதன் வெளியேற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இது சார்ந்த கரிமச் சந்தைகளை ஐக்கிய நாட்டு நிறுவனம் முன்னடத்தும்.
இந்தத் திட்டத்தை சில நாடுகள் தவறாகப் பயன்படுத்தி உண்மையானக் கரிம வெளியேற்றத்தை மறைக்க வாய்ப்புள்ளது என்பதும் பலரது கவலையாக உள்ளது.
இருப்பினும், வியாழக்கிழமை (பிப்ரவரி 26) ஐக்கிய நாட்டு நிறுவனம், தென்கொரியாவுக்கும் மியன்மாருக்கும் இடையிலான கரிம ஊக்கப்புள்ளித் திட்டத்துக்கு ஒப்புதலை வழங்கியுள்ளது. பாரிஸ் ஒப்பந்தப்படி, ஐநா வழங்கியுள்ள முதல் ஒப்புதல் இதுவாகும்.
காடுகளில் மரங்கள் அழிவதைத் தடுக்கும் நோக்குடன், நவீன சமையல் அடுப்புகள் மியன்மாரில் தென்கொரியாவால் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இருநாடுகளும் கரிம வெளியேற்றத்தைத் தடுக்க எடுக்கும் முயற்சிகளுக்கு கரிம ஊக்கப் புள்ளிகள் வழங்கப்படும்.
“தொடக்கத்தில் இருந்தே இந்தத் திட்டத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவது எங்கள் இலக்கு. முதல் ஒப்புதல் அதற்குச் சான்றாக அமைந்துள்ளது,” என்று ஐநா கரிம ஊக்கப்புள்ளி திட்டக்குழுவின் (PACM) துணைத் தலைவர் ஜெக்குவி ருயிஸ்கா கூறினார்.
பாரிஸ் ஒப்பந்தம் உலகளாவிய அளவில் அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்ட ஒன்றாகும். 2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றத்தை முற்றிலும் நிறுத்துவது அதன் தொலைநோக்காகும்.

