தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸா சிறாருக்கு இளம்பிள்ளை வாதச் சொட்டு மருந்து; ஐநா மும்முரம்

2 mins read
d479350e-f11f-4056-8546-2f1c550dd7ef
இளம்பிள்ளை வாதச் சொட்டு மருந்து கொடுக்கும் பணிகள் மத்திய காஸாவில் உள்ள சில பகுதிகளில் தொடங்கின.  - படம்: ராய்ட்டர்ஸ்

கெய்ரோ: காஸா முனையில் உள்ள கிட்டத்தட்ட 640,000 பாலஸ்தீன சிறுவர்களுக்கு இளம்பிள்ளை வாதச் சொட்டு மருந்து கொடுப்பதை ஐக்கிய நாடுகள் நிறுவனம் (ஐநா) செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி தொடங்கியது.

பாலஸ்தீன சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஐநா இந்தச் சொட்டு மருந்து முகாமை நடத்தி வருகிறது.

இதற்காகப் போரைத் தற்காலிகமாக நிறுத்த இஸ்‌ரேலும் ஹமாஸ் அமைப்பும் இணக்கம் தெரிவித்துள்ளன.

தொடர்ச்சியாக மூன்று நாள்களுக்குப் போர் குறைந்தது எட்டு மணி நேரத்துக்கு நிறுத்திவைக்கப்படும் என்று அறியப்படுகிறது.

காஸாவில் இளம்பிள்ளை வாதக் கிருமி காரணமாக குழந்தை ஒன்று கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் அதன் உடலின் சில பாகங்கள் செயலிழந்ததாகவும் உலகச் சுகாதார நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் உறுதிப்படுத்தியது.

இளம்பிள்ளை வாதச் சொட்டு மருந்து கொடுக்கும் பணிகள் மத்திய காஸாவில் உள்ள சில பகுதிகளில் தொடங்கின.

அடுத்த சில நாள்களில் காஸாவின் மற்ற பகுதிகளிலும் சிறுவர்களுக்குச் சொட்டு மருந்து கொடுக்கப்படும்.

இந்நிலையில், சொட்டு மருந்து கொடுக்கும் பணிகள் எந்த ஒரு பிரச்சினையும் இன்றி நடந்தேற போர் நிறுத்தத்தை நான்கு நாள்களுக்கு நீட்டிக்க வேண்டிவரும் என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியது.

சொட்டு மருந்து கொடுக்கும் பணிகள் கட்டங்கட்டமாக நடத்தப்படும் என்றும் போர்க்காலத்தின்போது பேரளவிலான சிறுவர்களுக்கு இந்த மருந்தைக் கொண்டுபோய் சேர்ப்பது மிகவும் சவால்மிக்கது என்றும் ஐநாவின் பாலஸ்தீன அகதிகள் பிரிவின் தொடர்புத்துறை இயக்குநர் திருவாட்டி ஜுலியேட் டோவ்மா தெரிவித்தார்.

காஸாவில் உள்ள சிறுவர்கள் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களுக்கு உடனடியாக இந்தச் சொட்டு மருந்தைக் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

காஸாவில் உள்ள சிறுவர்களில் 90 விழுக்காட்டினருக்கு இரண்டு முறை சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்முறை சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதை அடுத்து, நான்கு வாரங்கள் இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது முறையாக அந்த மருந்து தரப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போதுதான் இலக்கை அடைய முடியும் என்று அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்