ஜெனீவா: ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனித உரிமைப் பிரிவுத் தலைவர் வோல்கர் டுர்க், $400 மில்லியன் உதவிநிதி கேட்டு வியாழக்கிழமை (பிப்ரவரி 5) அழைப்பு விடுத்துள்ளார்.
சூடான், மியன்மார் போன்ற நாடுகளில் மனித உரிமைச் சிக்கல்கள் அதிகரித்துவரும் நிலையில் அவற்றைக் கையாள அந்த நிதி தேவை என்றார் அவர்.
நன்கொடை அளிக்கும் நாடுகள் நிதியுதவியை வெகுவாய்க் குறைத்துவிட்டதால் தமது அலுவலகம் சிரமப்படுவதாக அவர் சொன்னார். தமது அலுவலகம் நீடித்திருப்பதே கேள்விக்குறியாகியுள்ளதாகத் திரு டுர்க் குறிப்பிட்டார்.
ஐநா அலுவலகம் சென்ற ஆண்டைக் (2025) காட்டிலும் இப்போது $100 மில்லியன் குறைவாகக் கேட்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் அளித்த நிதியுதவி குறைந்ததைத் தொடர்ந்து அது சில துறைகளில் பணிகளைக் குறைத்துக்கொண்டது.
“அலுவலகம் கடும் நெருக்கடியில் இருக்கிறது. சிக்கலுக்கு இடையே சேவையாற்றுகிறோம்,” என்று திரு டுர்க் கூறினார். ஜெனீவாவில் பேராளர்களிடையே பேசிய அவர், ஆதரவைக் கூட்டும்படி நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.
போன ஆண்டு, காஸா, சூடான், காங்கோ ஜனநாயகக் குடியரசு, உக்ரேன், மியன்மார் உள்ளிட்ட நாடுகளில் மனித உரிமை அத்துமீறல்கள் நடப்பதாகத் திரு டுர்க்கின் அலுவலகம் குறிப்பிட்டிருந்தது.
நிதியுதவி குறைக்கப்பட்டதால், 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைக் கண்காணிப்புப் பணிகள் 50 விழுக்காட்டுக்கும் மேல் குறைந்தன; ஐநா அலுவலகத்தின் செயல்பாடுகள் குறைந்தன; தேவைப்பட்டதைவிடச் சென்ற ஆண்டு $90 மில்லியன் குறைவாய்க் கிடைத்ததாகத் திரு டுர்க் சொன்னார். அதனால் 300 பேர் ஆட்குறைப்புச் செய்யப்பட்டதாகக் கடந்த ஆண்டு டிசம்பரில் அவர் கூறியிருந்தார்.
“மனித உரிமைக் கட்டமைப்பு நெருக்கடிக்குத் தள்ளப்படுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,” என்றார் திரு டுர்க்.
தொடர்புடைய செய்திகள்
மியன்மாருக்கான திட்டம் 60 விழுக்காட்டிற்கும் அதிகமாய்க் குறைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அதனால் ஆதாரங்களைத் திரட்டுவதற்குப் போதுமான வளங்கள் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் உத்தேசப் போர்க் குற்றங்களின் தொடர்பில் ஐநா மேற்கொண்டுள்ள புலனாய்வு முயற்சிகளும் போதிய நிதியுதவி இல்லாததால் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாகத் திரு டுர்க் கூறினார்.

