நியூயார்க்: தான் இறக்குமதி செய்யும் அமெரிக்கப் பொருள்களுக்குச் சீனா மார்ச் மாதத்தில் கூடுதல் வரிகள் விதித்திருந்தது. இந்நிலையில், அதன் அமலாக்கத்தை ஓர் ஆண்டுக்குத் தள்ளிவைப்பதாக புதன்கிழமை (நவம்பர் 5) சீனா அறிவித்துள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் ஸி ஜின்பிங் இருவரும் தென்கொரியாவில் சந்தித்தனர். அப்போது, சீனாவின் இந்த முடிவுக்கான அதிகாரபூர்வ இணக்கம் எட்டப்பட்டது. பல மாதங்களாக இதற்கான பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்றுள்ளது.
சீனத் தலைநகர் பெய்ஜிங் அரசாங்க மன்றத்தை மேற்கோள்காட்டி, அந்நாட்டு நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க இறக்குமதிகளுக்கு 10 விழுக்காடு வரி தொடரும் எனவும், 24 விழுக்காட்டுக்கான கூடுதல் வரி விதிப்பு தற்காலிகமாக ஓர் ஆண்டுக்கு நிறுத்திவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அமெரிக்க வர்த்தக, பொருளியல் ஆலோசனைகளுக்குப் பிறகு, கூடுதல் வரிக்கான தற்காலிகத் தடையின் ஓராண்டு நீட்டிப்பு நவம்பர் 10ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் அதன் பங்கிற்கு, அதிபர் டிரம்ப்பின் ஒப்புதலுடன் நவம்பர் 10ஆம் தேதி முதல் சீன இறக்குமதிகளுக்கு 20 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாக வரிகளைக் குறைப்பதை உறுதிசெய்துள்ளது.
இவ்வாண்டு உலகின் இருபெரும் பொருளியல் வல்லரசுகளான சீனாவும் அமெரிக்காவும் ஒரு நாட்டின்மீது மற்றொரு நாடு பலவித வரிகளை போட்டிபோட்டு விதித்துக்கொண்டன. ஒரு கட்டத்தில் உலக வர்த்தகத்தை தடுமாறச் செய்யும் வகையில் தீர்வையின் விகிதங்கள் இருந்தன.
வரிவிதிப்பு பூசல் உச்சத்தில் இருந்தபோது, அமெரிக்காவுக்கு அத்தியாவசிய அரிய கனிமப்பொருள்கள் ஏற்றுமதி செய்வதற்கு சீனா தடை விதித்தது. அதன் காரணமாக சீனாவுக்கு எதிராக அதன் கப்பல் கட்டமைப்பு நிறுவனங்கள்மீது அமெரிக்கா குறிவைத்து, துறைமுகச் செயல்பாடுகளுக்கு கூடுதல் வரிகளை விதித்தது.

