தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொருளியல், வர்த்தக விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்: அமெரிக்காவிடம் சீனா வலியுறுத்து

2 mins read
a75fe59e-e0be-48f3-b2fa-314a8ee59592
2019 ஜூன் 29ஆம் தேதி ஜப்பானில் ஜி20 தலைவர்கள் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: பொருளியல், வர்த்தக விவகாரங்களை அரசியலாக்குவதையும் ஆயுதமாக்குவதையும் நிறுத்திக்கொள்ளும்படி அமெரிக்காவிடம் சீனா கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கைக்கு இணங்க, வெளிநாடுகளில் சீனாவின் முதலீடுகளைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முற்படும் வேளையில், சீனா இந்த அறைகூவலை விடுத்துள்ளது.

பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில், சீனாவுடனான வர்த்தக உறவுகளை மறுஆய்வு செய்யும் அமெரிக்க அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள், அமெரிக்காவில் முதலீடு செய்யும் சீன நிறுவனங்களின் நம்பிக்கைக்குப் பங்கம் விளைவிக்கும் என சீன வணிக அமைச்சு சனிக்கிழமை (பிப்ரவரி 22) தெரிவித்தது.

சீனாவுடனான வர்த்தகப் போர் மேலும் மோசமடைவதைத் தவிர்க்க உடன்பாடு செய்துகொள்வதற்கான சாத்தியம் குறித்து அதிபர் டிரம்ப் முன்னதாக சூசகமாகக் கூறியிருந்தார். எனினும், அமெரிக்காவுடன் சீனாவுக்கு US$295 பில்லியன் (S$393.88 பி.) மதிப்பில் வர்த்தக உபரி, புதிய அமெரிக்க அரசாங்கத்தின் கவலைகளில் ஒன்றாக உள்ளது. புளூம்பெர்க் ஒளிவழிக்கு அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் அளித்த நேர்காணல் ஒன்றில், ‘உலக வரலாற்றிலேயே ஆகச் சமநிலையற்ற பொருளியல் சீனா’ என வருணித்திருந்தார்.

இவ்வேளையில், அமெரிக்காவின் நடவடிக்கைகளைச் சீனா அணுக்கமாகக் கண்காணிக்கும் என்றும் அதன் சொந்த உரிமைகளையும் நலன்களையும் காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் சீன வணிக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இந்நிலையில், சீன வணிக அமைச்சு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட மற்றோர் அறிக்கையில், சீனாவின் கடல்துறை, தளவாடவியல், கப்பல் கட்டுமானத் துறைகளுக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்துள்ள கட்டுப்பாடுகள், மற்ற நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் தீங்கு விளைவிக்கும் என எச்சரித்துள்ளது.

உண்மைகளையும் பலதரப்பட்ட விதிகளையும் மதித்து நடக்கும்படியும் ‘அதன் தவறுகளை நிறுத்தும்படியும்’ அமெரிக்காவிடம் சீனா வலியுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்