வாஷிங்டன்: அமெரிக்க உயர்கல்வித் துறையை சோதனைகளுக்கு அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் உள்ளாக்கும் நேரத்தில் தம் நாட்டிலுள்ள சீனாவைச் சேர்ந்த அனைத்துலக மாணவர்கள் நலமுடன் இருப்பர் என்று திரு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சீன மாணவர்களுக்கான அனுமதியைக் குறிப்பிட்டுக் கூறி அவற்றைப் பரிசீலிக்க விரும்புவதாக டிரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் தெரிவித்தது.
இருந்தபோதும் அமெரிக்காவில் பயிலும் சீன மாணவர்களுக்குச் சொல்ல விரும்புவது என்ன என்று செய்தியாளர் ஒருவர் வெள்ளிக்கிழமை (மே 30) கேட்டதற்குத் திரு டிரம்ப, “அவர்கள் நலமுடன் இருப்பர். எல்லாம் சரியாகிவிடும்,” என்று கூறினார்.
“தனிப்பட்ட மாணவர்கள் மீதுதான் சோதனை நடத்த விரும்புகிறோம். இது எல்லாக் கல்லூரிகளுக்கும் பொருந்தும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஹார்வர்டு பல்கலைக்கழகம் அனைத்துலக மாணவர்களைச் சேர்ப்பதற்குத் திரு டிரம்ப் தடை விதித்திருந்தார். அமெரிக்க நீதிமன்றம் ஒன்று விதித்த தற்காலிகத் தடையை மே 29ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் நீக்கியது.
மே 28ஆம் தேதியன்று சீனாவைச் சேர்ந்த மாணவர்களின் விசாக்களை முனைப்புடன் மீட்டுக்கொள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ சூளுரைத்திருக்கிறார்.
காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைக் கண்டித்துப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்ட விவகாரத்தின் தொடர்பில் ஏற்கெனவே அமெரிக்கா ஆயிரக்கணக்கான விசாக்களை நிறுத்தியுள்ளது. போக்குவரத்து விதிமீறல் போன்ற சிறிய குற்றங்களுக்கும் விசாக்கள் ரத்தாகின்றன.
அமெரிக்காவின் உயர்கல்வித் துறையுடன், குறிப்பாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் டிரம்ப் நிர்வாகம் போராடி வருகிறது. அரசாங்கம் கேட்கும் மாணவர் பட்டியலை கொடுக்க , புகழ்பெற்ற அந்தப் பல்கலைக்கழகம் மறுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“ஹார்வர்டு எங்களுக்கு ஏன் இந்தப் பட்டியலைத் தரவில்லை என்பது எனக்குத் தெரியாது. ஹார்வர்டு அந்தப் பட்டியலை எங்களுக்குக் கொடுக்காததால் ஏதோ ஒன்று நடக்கிறது,” என்று திரு டிரம்ப், மே 30ஆம் தேதியன்று கூறினார்.
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அனைத்துலக மாணவர்களின் விகிதம் 6 விழுக்காட்டுக்கு குறைவாக உள்ளது. இது பிரிட்டனின் 25 விழுக்காட்டைக் காட்டிலும் மிகக் குறைவு.
இதற்கிடையே, ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வெளிநாட்டினருக்கான விசா விண்ணப்பங்களைக் கூடுதலாகச் சரிபார்க்க அமெரிக்க வெளியுறவு அமைச்சு, தனது அனைத்து தூதரங்களுக்கும் உத்தரவிட்டதாகக் குறிப்பு ஒன்றை தான் கண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.