தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கிழக்காசிய நாடுகளின் சூரியசக்தித் தகடுகளுக்கு வரி விதிக்கும் அமெரிக்கா

2 mins read
b055d334-631b-4de2-99a3-5b49a4c42b7b
மலேசியா, கம்போடியா, வியட்னாம், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், நியாயமற்ற வகையில் மலிவான பொருள்களைச் சந்தையில் குவிப்பதாக அமெரிக்காவில் சூரியசக்தித் தகடுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் கூறுகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க அதிகாரிகள், தென்கிழக்காசியாவிலிருந்து இறக்குமதியாகும் சூரியசக்தித் தகடுகளுக்கு நவம்பர் 29ஆம் தேதி, புதிய வரியை விதித்துள்ளனர்.

தென்கிழக்காசிய நிறுவனங்கள், நியாயமற்ற வகையில் மலிவான பொருள்களைச் சந்தையில் குவிப்பதாக அமெரிக்காவில் சூரியசக்தித் தகடுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் புகாரளித்ததைத் தொடர்ந்து இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய புகார் தொடர்பில் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நடவடிக்கை எடுத்துள்ளது.

அமெரிக்காவில் சூரியசக்தித் தகடு உற்பத்தியில் முதலீடு செய்யப்பட்டுள்ள பில்லியன்கணக்கான டாலர்களைப் பாதுகாக்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.

அரிசோனாவில் அமைந்துள்ள ‘ஃபர்ஸ்ட் சோலார்’ நிறுவனம், கொரியாவின் ‘ஹன்வா கியூசெல்ஸ்’ நிறுவனம் ஆகியவற்றுடன் இதர சிறு நிறுவனங்களும் தென்கிழக்காசிய இறக்குமதி குறித்துப் புகாரளித்தன.

மலேசியா, கம்போடியா, வியட்னாம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் சூரியசக்தித் தகடுகளைத் தயாரிக்கும் சீனப் பெருநிறுவனங்கள், சந்தையில் பொருள்களைக் குவிப்பதன் மூலம் உலகளாவிய நிலையில் விலை வீழ்ச்சியை ஏற்படுத்துவதாக சூரியசக்தித் தகடு உற்பத்தி வர்த்தகக் குழுவுக்கான அமெரிக்கக் கூட்டணி எனும் குழுமம் கூறியது.

எனவே, அமெரிக்க அதிகாரிகள் புதிய வரியை அறிவித்துள்ளனர்.

நவம்பர் 29ஆம் தேதி அமெரிக்க வர்த்தக அமைச்சின் இணையத்தளத்தில் இதுகுறித்துப் பதிவிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், மலேசியா, கம்போடியா, வியட்னாம், தாய்லாந்து ஆகியவற்றிலிருந்து இறக்குமதியாகும் சூரியசக்தித் தகடுகளுக்கு 21.31 விழுக்காடு முதல் 271.2 விழுக்காடு வரை வரி விதிக்கப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. நிறுவனத்துக்கு நிறுவனம் இந்த வரி விகிதம் மாறுபடும்.

எடுத்துக்காட்டாக, ‘ஜின்கோ சோலார்’ நிறுவனம் மலேசியாவில் தயாரிக்கும் பொருள்களுக்கு 21.31 விழுக்காட்டு வரியும் வியட்னாமில் தயாரிக்கும் பொருள்களுக்கு 56.51 விழுக்காட்டு வரியும் செலுத்த வேண்டியிருக்கும்.

சீன நிறுவனமான ‘டிரினா சோலார்’ தாய்லாந்தில் தயாரிக்கும் சூரியசக்தித் தகடுகளுக்கு 77.85 விழுக்காட்டு வரியும் வியட்னாமில் தயாரிப்பவற்றுக்கு 54.56 விழுக்காட்டு வரியும் செலுத்த வேண்டும்.

ஆனால், ‘ஹன்வா கியூசெல்ஸ்’ நிறுவனம் மலேசியாவில் தயாரிக்கும் பொருள்களுக்கு எவ்வித வரியும் விதிக்கப்படவில்லை.

‘ஜின்கோ சோலார்’, ‘டிரினா சோலார்’ நிறுவனங்கள் இதுகுறித்து உடனடியாகக் கருத்துரைக்கவில்லை.

அமெரிக்காவில் பொருத்தப்பட்டுள்ள சூரியசக்தித் தகடுகளில் பெரும்பாலானவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அவற்றில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு, மலேசியா, கம்போடியா, வியட்னாம், தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

குறிப்புச் சொற்கள்