வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் டிக்டாக் சமூக தளத்தை விற்பதற்கான காலக்கெடு முடிவதற்குள் அதுகுறித்த இறுதிகட்ட முடிவை ஆலோசிக்கவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இம்மாதம் 5ஆம் தேதிக்குள் சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் டிக்டாக் தளத்தை ஓர் அமெரிக்க நிறுவனத்திடம் விற்கவேண்டும். இல்லையேல் அமெரிக்காவில் அது தடைசெய்யப்படும் என்று திரு டிரம்ப் இதற்குமுன் அறிவித்திருந்தார்.
அது தொடர்பில் திரு டிரம்ப் துணையதிபர் ஜேடி வான்ஸ், வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லியுட்னிக், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோருடன் அதிபர் அலுவலகத்தில் கலந்துரையாடவிருக்கிறார்.
பைட்டான்ஸ் நிறுவனத்தில் பங்கு வகிக்கும் சீனர் அல்லாத பங்குதாரர்களுடன் இணைவது பற்றி தனியார் நிறுவனமான பிளேக்ஸ்டோன் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தது.
ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் பைட்டான்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்படக்கூடும் என்று திரு டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) மீண்டும் வலியுறுத்தினார்.
அமெரிக்க நிறுவனமான அன்டிரீசென் ஹொரொவிட்ஸ் டிக்டாக் சமூக தளத்தில் முதலீடு செய்வது குறித்து யோசித்துவருகிறது என்று ஃபைனென்ஷல் டைம்ஸ் நாளேடு சொன்னது.
டிக்டாக் தளத்தை வாங்கும் ஒப்பந்தம் பற்றி 4 வெவ்வேறு குழுக்களுடன் தமது நிர்வாகம் தொடர்பில் இருப்பதாக திரு டிரம்ப் கடந்த மாதம் குறிப்பிட்டார்.