உக்ரேனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்கவுள்ளது அமெரிக்கா

உக்ரேனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்கவுள்ளது அமெரிக்கா

படம்: ராய்ட்டர்ஸ்

31 Oct 2026 - 11:04 am

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்கா உக்ரேனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.

தீவிரமடைந்துவரும் ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக்கொள்ள உக்ரேனுக்கு இவை மிகவும் அத்தியாவசியமான ஆயுதங்கள் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த ஏவுகணைகள் வந்து சேருவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம் என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

அதிநவீன பேக்-3 ரக இடைமறிப்பு ஏவுகணைகளின் மதிப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும் இதற்கான செலவை ஐரோப்பாவில் உள்ள உக்ரேனின் நட்பு நாடுகளும் கனடாவும் முழுமையாக ஏற்கும் என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

ரஷ்யாவின் ஆபத்தான புவியீர்ப்பு ஏவுகணைகளை வீழ்த்துவதற்கு ஒரே திறமையான ஆயுதமாக விளங்கும் பேட்ரியாட் ஏவுகணைகளை வழங்குவதை அமெரிக்கா விரைவுபடுத்த வேண்டும் என்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) இரவு ஸெலென்ஸ்கி மீண்டும் வலியுறுத்தினார்.

ரஷ்ய டீசலைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அந்நாட்டின்மீதான பொருளியல் தடைகளை அமெரிக்கா அண்மையில் தளர்த்தியது. அதனையடுத்து, இம்மாதத் தொடக்கத்தில் திரு ஸெலென்ஸ்கிக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு அமெரிக்காவின் அறிவிப்பு வந்துள்ளது.

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ஓர் ஒப்பந்தத்தை எட்ட உக்ரேனுக்குப் புதிய தலைவர் வரவேண்டிய நேரம் இது என்று அமெரிக்க அதிபர் கூறியிருந்தார்.

இதற்கு முன்னர், கிரைமியாவையும் கிழக்கில் உள்ள டான்பாசின் சில பகுதிகளையும் கைப்பற்றியிருந்த ர‌‌ஷ்யா, 2022ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் உக்ரேன்மீது முழு அளவிலான ஆக்கிரமிப்பைத் தொடங்கியது.

குறிப்புச் சொற்கள்