வாஷிங்டன்: விமானப் போக்குவரத்துக்கான தொலைத்தொடர்புக் கட்டமைப்பு துண்டிக்கப்பட்டதால் அமெரிக்கக் கூட்டரசு விமானத் துறை நிர்வாகம் நாடு தழுவிய அளவில் அனைத்து விமானப் பயணங்களையும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) ரத்து செய்துள்ளது.
அதன்படி, பாதுகாப்பு கருதி, வானில் பறந்த விமானங்கள் உடனடியாகத் தரையிறக்கப்பட்டன. பயணத்தைத் தொடங்காத தரையில் நின்ற விமானப் பயணங்கள் ரத்தாகின.
அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ல் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு வரலாறு காணாத அளவில் தற்போதைய நடவடிக்கை நாடுதழுவிய நிலையில் இரண்டாவது முறையாக எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பல நகரங்களுக்குச் செல்லவேண்டிய ஏறத்தாழ 1,000 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால் பல விமான நிலையங்களில் குழப்பம் நிலவியது. மேலும் 10,000க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. அதனை விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் ‘ஃபிளைட்அவேர்’ சேவையின் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
ஆயிரக்கணக்கில் அமெரிக்க வான்வெளியில் பறந்துகொண்டிருந்த விமானங்கள் தரையிறங்கின. ஐரோப்பாவிலிருந்தும் கனடாவிலிருந்தும் அமெரிக்கா வரவேண்டிய பல பயணங்கள் வலுக்கட்டாயமாக ரத்துசெய்யப்பட்டன.
இணைய ஊடுருவல் போன்ற தீங்குநிரல் தாக்குதல் நடந்ததற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லை என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியது.
“இது ஒரு தொலைத்தொடர்பு துண்டிப்பு சம்பந்தப்பட்டது மட்டுமே. பொதுமக்கள் எதற்கும் பயங்கொள்ளத் தேவையில்லை. 9/11ல் நடந்த தீவிரவாதத் தாக்குதல் போன்றதல்ல,” என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் மார்க்வேன் முலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
வெர்ஜினியா மாநிலத்தில் உள்ள ரோனல்ட் ரீகன் விமான நிலையத்தில் முதன்முதலில் விமானப் போக்குவரத்து தொலைத்தொடர்பில் தீவிர பிரச்சினைகள் அன்றையதினம் கண்டறியப்பட்டது. அதன்பிறகே அசாதாரண சூழ்நிலைகளாலும் பாதுகாப்புக் காரணங்களாலும் நாட்டின் அனைத்து விமானப் பயணங்களையும் ரத்து செய்யும் அறிவிப்பு அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
