தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிக்டாக் கட்டமைப்பு உடன்பாட்டை எட்டிய அமெரிக்கா, சீனா

2 mins read
b1bbf20f-057f-4554-93b4-eb8c624c70f4
லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள டிக்டாக் அலுவலகம். - படம்: ஏஎஃப்பி

மட்ரிட்: அமெரிக்காவும் சீனாவும் இழுபறியாக இருந்த டிக்டாக் செயலி விவகாரம் தொடர்பில் இணக்கம் கண்டுள்ளன. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள உரிமையாளரிடம் டிக்டாக் செயலியை ஒப்படைக்க கட்டமைப்பு அளவிலான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் சீனாவும் செய்துகொள்ளவிருக்கின்றன.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் இம்மாதம் 19ஆம் தேதி தொலைபேசியில் உரையாடும்போது ஒப்பந்தம் உறுதிபடுத்தப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரபல டிக்டாக் செயலியை இம்மாதம் 17ஆம் தேதிக்குள் சீனா, அமெரிக்க நிறுவனத்திடம் கைமாற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்காவில் அது தடைசெய்யப்படும். செயலி குறித்த உடன்பாட்டை எட்ட அந்த நிபந்தனை சீனாவை உந்தியதாகச் சொன்னார் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸ்ஸண்ட்.

தற்போதை உடன்பாட்டை உறுதிப்படுத்த காலக்கெடு மேலும் 90 நாள்களுக்குத் தள்ளிவைக்கப்படக்கூடும் என்றும் குறிப்பிட்ட அவர், அதுகுறித்த கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை.

“செயலியில் உள்ள சீன வடிவமைப்புகளை அப்படியே வைத்திருப்பதில் சீனா விரும்புகிறது. அது ஓரளவுக்கு சீனாவுக்குச் செயலிமீது உரிமை தரும் என்று நம்புகிறார்கள். அதுகுறித்து எங்களுக்கு அக்கறை இல்லை. தேசியப் பாதுகாப்புமீதுதான் எங்களுக்கு அக்கறை உண்டு,” என்று திரு பெஸ்ஸண்ட் குறிப்பிட்டார்.

டிக்டாக் பற்றிய உடன்பாட்டை எட்டுவதாக அமெரிக்காவும் சீனாவும் கூறுவது இந்த ஆண்டில் இது இரண்டாவது முறை.

இதற்குமுன் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஒப்பந்தம் கைகூடவில்லை.

டிக்டாக் செயலியைப் பயன்படுத்தும் அமெரிக்கர்களின் விவரங்களைச் சீன அரசாங்கத்தால் பெற முடியும் என்ற அச்சம் காரணமாக 2024ஆம் ஆண்டு டிக்டாக் தொடர்பான இணக்கத்துக்கு அமெரிக்கா நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை என்ற சட்டம் அறிவிக்கப்பட்டது.

டிக்டாக் தொடர்பான விவகாரத்தில் அடிப்படை கட்டமைப்புக்கான ஒப்புதலைத்தான் இருதரப்பும் எட்டியிருப்பதாக சீனா குறிப்பிட்டது.

அமெரிக்காவில் டிக்டாக் செயலியை முடக்குவதற்கான முடிவை டிரம்ப் நிர்வாகம் பலமுறை கைவிட்டுள்ளது. அவ்வாறு செய்தால் செயலியைப் பயன்படுத்தும் மில்லியன்கணக்கான பயனீட்டாளர்கள் சினமடைவார்கள் என்றும் அரசியல் தொடர்புகளிலும் தடங்கல் ஏற்படும் என்றும் அது அஞ்சியது.

குறிப்புச் சொற்கள்