வாஷிங்டன்: தென்கிழக்காசியாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு 17 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஆசியான் உச்சநிலைச் சந்திப்பிற்காக அதிகாரத்துவப் பயணமாக இரண்டு நாள்களுக்குப் பிலிப்பீன்ஸ் சென்றிருந்த திரு டிரம்ப், வர்த்தக உடன்பாடுகளாகவும் உத்திபூர்வ முதலீடாகவும் அந்த நிதியை அறிவித்ததாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டது.
போயிங், ஜிஇ ஏரோஸ்பேஸ் ஆகிய நிறுவனங்கள் 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள 20 போயிங் 787 ரக விமானங்களைப் பிலிப்பீன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதும் அந்த உடன்பாடுகளில் அடங்கும்.
பிலிப்பீன்சின் தற்காப்புக் கொள்முதலுக்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான அமெரிக்க நிதியைப் பெற அமெரிக்காவும் பிலிப்பீன்சும் முயலும்.
தென்சீனக் கடலில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா, 400 மில்லியன் டாலர் நிதியையும் வழங்கவிருக்கிறது.
சுபிக் பேயில் 40 மில்லியன் டாலர் மதிப்புள்ள எரிபொருள் கிடங்கை சுபிக் கிரேன் நிறுவனம் கட்டவிருக்கும் நிலையில் ராணுவப் படைகளும் பேரிடர் குழுக்களும் எளிதில் வந்துசெல்வதற்கு வசதியாக பாஸ்கோ விமான நிலையத்தைப் பிலிப்பீன்ஸ் மேம்படுத்தவிருக்கிறது.
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் நவீன நடமாடும் பீரங்கி ராக்கெட் கட்டமைப்புகளில் தாய்லாந்து 123 மில்லியன் டாலரைச் செலவிடத் திட்டமிட்டுள்ளது. தென்கிழக்காசியாவில் அத்தகைய உடன்பாடு செய்யப்படுவது இது முதல் முறை என்று வெள்ளை மாளிகை அறிக்கை சுட்டியது.
அமெரிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் $2 பில்லியன் நிலக்கரித் திட்டம் குறித்து இந்தோனீசியாவில் லேட்டிடியூட் எனெர்ஜி, டனந்தரா ஆகிய நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன.
மலேசியாவின் தேசிய மின்சாரக் கட்டமைப்பான டெனாகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்திற்கு நிலக்கரியை விநியோகம் செய்ய நவாஜோ டிரான்சிஷனல் எனெர்ஜி நிறுவனம் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான மூவாண்டு உடன்பாட்டைச் செய்துகொண்டது.
மலேசியாவிலும் புருணையிலும் செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கவும் அமெரிக்கா உறுதிகூறியுள்ளது.
