தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸாவைக் கைப்பற்றும் யோசனை: பின்வாங்குகிறது அமெரிக்கா

2 mins read
8ff12327-1eeb-49c1-807d-faf497519214
அமெரிக்க தற்காப்பு அமைச்சர் மார்க்கோ ரூபியோ. - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: காஸாவை கைப்பற்றுவோம் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்த கருத்துக்கு உலக அளவில் பெரும் எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து, அந்த யோசனையில் இருந்து அமெரிக்கா பின்வாங்குவது போலத் தெரிகிறது.

அண்மையில் அமெரிக்காவுக்கு வருகை அளித்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த திரு டிரம்ப், பாலஸ்தீனர்களை வெளியேற்றிவிட்டு காஸாவை மறுநிர்மாணம் செய்யும் யோசனையைத் தெரிவித்து இருந்தார்.

ஆனால், அவரது அந்த யோசனைக்கு எதிராக ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களும் அரேபிய அரசாங்கங்களும் உலகத் தலைவர்களும் கடுமையாகக் குரல் எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து, டிரம்ப்பின் நிர்வாகத்தில் வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பு ஏற்றிருக்கும் மார்க்கோ ரூபியோ விளக்கம் அளித்துள்ளார்.

காஸாவில் இருந்து குடியிருப்பாளர்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது என்னும் யோசனை தற்காலிகமானதுதான் என்றும் அமெரிக்கப் படையினரை அங்கு அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், தமது யோசனையை ஒவ்வொருவரும் நேசிப்பதாக திரு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) செய்தியாளர்களிடம் பேசியபோது, போரால் உருக்குலைந்துவிட்ட காஸாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது பற்றியும் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை அங்கிருந்து வெளியேற்றுவது பற்றியும் அதிபர் டிரம்ப் புதிய கருத்துகளை வெளிப்படுத்தி இருந்தார்.

“காஸாவைக் கைப்பற்றி எங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வோம். அங்கு அமெரிக்காவுக்கு வேலை உள்ளது,” என்று அப்போது அவர் தெரிவித்திருந்தார்.

“அதிபரின் அந்த யோசனை விரோதமான கருத்து அல்ல. மாறாக, மறுநிர்மாணத்திற்குப் பொறுப்பேற்கும் பெருந்தன்மையான நடவடிக்கை அது,” என்று திரு ரூபியோ தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், காஸாவின் மறுநிர்மாணத்திற்கு அமெரிக்கா நிதி வழங்காது என்று வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலாளர் கரோலைன் லீவிட் தெரிவித்து உள்ளார்.

“அமெரிக்காவின் தலையீடு என்பது காஸாவில் கால்பதிப்பது எனப் பொருள்படாது. மேலும், காஸாவை மீண்டும் கட்டி எழுப்ப அமெரிக்க மக்களின் நிதி பயன்படுத்தப்பட மாட்டாது,” என்று திருவாட்டி லீவிட் தெளிவுபடுத்தி உள்ளார்.

இதற்கிடையே, காஸாவில் இன அழிப்பை மேற்கொள்ள வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் அமெரிக்காவின் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்