இடைக்காலத் தேர்தலுக்கு முன் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

இடைக்காலத் தேர்தலுக்கு முன் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

படம்: புளூம்பெர்க்

03 Nov 2026 - 7:58 pm

2 mins read

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானுக்குச் சொந்தமான கெஷெம் தீவின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. பிபிசியின் அமெரிக்கப் பங்காளியான சிபிஎஸ் நிறுவனத்திடம் அமெரிக்க அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தினர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் அதிகாரக் கட்டுப்பாடு குடியரசுக் கட்சியிடமா அல்லது ஜனநாயகக் கட்சியிடமா என்பதைத் தீர்மானிக்கும் இடைக்காலத் தேர்தல் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) நடைபெறவிருக்கும் வேளையில் ஈரான்மீது அமெரிக்கா இந்த ரகசியத் தாக்குதலை நடத்தி இருக்கிறது.

திங்கட்கிழமை (நவம்பர் 2) அத்தீவில் பல வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக ஈரானிய அரசாங்கத்துக்குச் சொந்தமான செய்தி நிறுவனமான ‘ஐஆர்என்ஏ’ தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகத் தங்கள்மீது அமெரிக்கா சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வருவதாக ஈரான் குற்றம் சாட்டியிருக்கிறது.

அமெரிக்க விமானம் ஒன்றின் மீது ஈரானின் இஸ்லாமியப் புரட்சிப் படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்குப் பதிலடியாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இத்தாக்குதல்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டவை என்றும் அமெரிக்க அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து அறிய, மத்திய கிழக்கு வட்டாரத்தில் ராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமெரிக்க மத்திய தளபத்தியத்தை பிபிசி தொடர்பு கொண்டுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் தொடுத்தபோது தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தனது கட்சிக்குள்ளிருந்தே கடும் அழுத்தங்களை எதிர்கொண்டு வருவதுடன், தேர்தல் கருத்துக்கணிப்புகளிலும் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.

ஈரான் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவதில் தமக்கு எவ்வித அவசரமும் இல்லை என்று அதிபர் டிரம்ப் திங்கட்கிழமையன்று தெரிவித்தார்.

“ஏதோ ஒரு வகையில் நடவடிக்கை எடுப்போம். ஆனால் அதற்கு அவசரமில்லை. ஈரானைப் பொருளியல் ரீதியாக முடக்கிவிட்டோம். அவர்களிடம் பணமும் இல்லை, பெட்ரோலும் இல்லை. அந்நாட்டு மக்களும் இதனால் மிகுந்த சோர்வடைந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.

இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஈரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய ‘பிக்ஸ்ஆக்ஸ்’ தளத்தின் மீதும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கலாம் என்று கூறிய அதிபர் டிரம்ப், அது ஒரு பெரிய விஷயம் அல்ல என்றும் ஒரு மணி நேரத்திற்குள் அதைச் செய்து முடித்துவிட முடியும் என்றும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்