சீனாவின் மனிதவடிவ ‘ரோபோ’க்களுக்குத் தடை விதித்த அமெரிக்கா

சீனாவின் மனிதவடிவ ‘ரோபோ’க்களுக்குத் தடை விதித்த அமெரிக்கா

2 mins read
d290738a-c4c7-4db7-bb9b-4f79ebd36d37
ஷங்காய் நகரில் ஜூலை 18 அன்று நடந்த உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் இயந்திர மனிதனின் கையைத் தொட்டுப் பார்க்கும் பார்வையாளர். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

வாஷிங்டன்: அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் சீனாவிலிருந்து புதிய மனிதவடிவ ‘ரோபோ’க்களையும் ‘இன்வெர்ட்டர்’ எனப்படும் மின்சக்தி விநியோகத்தை மாற்றியமைக்கும் சாதனங்களையும் இறக்குமதி செய்ய அதிபர் டிரம்ப்பின் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

அமெரிக்காவின் கூட்டரசுத் தொடர்பு ஆணையம் (எஃப்சிசி) இப்புதிய கட்டுப்பாடுகளைச் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) அறிவித்தது.

இந்தத் தடைகள் வழியாக சீனா தயாரிக்கும் மனிதவடிவிலான இயந்திரங்கள், நான்குகால்கள் கொண்ட ரோபோக்கள் போன்றவற்றை சீனா அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்ய முடியாது. மேலும் மின்னுற்பத்தி கட்டமைப்புக்குப் பயன்படும் சாதனங்களும் தடை செய்யப்படுகின்றன.

மறுபயனீடு செய்யக்கூடிய மின்உற்பத்திக்கான அவ்வகை சாதனங்களைக் கொண்டு அமெரிக்காவின் முக்கியத் தரவுகளைக் களவாடவும் உளவு பார்க்கவும் இணையத் தாக்குதல்களை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளதால் அவற்றை இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்படுகிறது என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் பயனாகப் பல செயற்கை நுண்ணறிவு சார்ந்த தயாரிப்பு நிறுவனங்களை அமெரிக்காவுக்கு வரவழைக்க இது உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்தக் கருவிகள் விநியோகத் தொடரில் அபாயங்களை ஏற்படுத்த முடியும். அது அமெரிக்கப் பொருளியலுக்கும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் இணையச் செயல்பாட்டுக்கும் பங்கம் விளைவித்து அத்தியாவசிய கட்டமைப்புகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்,” என்று எஃப்சிசி அமைப்பின் தலைவர் பிரெண்டன் கார் செய்தி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அமெரிக்காவின் விநியோகத் தொடர் பாதுகாப்பாக இருப்பதற்கு எஃப்சிசி அமைப்பு தொடர்ந்து செயலாற்றும் என்று அவர் உறுதியளித்தார்.

சீனத் தூதரகம் கண்டனம்

வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம், இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகச் சமூகத்தின் பகுத்தறிவு சார்ந்தோரின் குரல்களைக் கேட்டு நடக்கும்படி அமெரிக்காவை வலியுறுத்தியது. சீன நிறுவனங்கள்மீது அவதூறுகளையும் தடைகளையும் அள்ளி வீசுவதை நிறுத்தும்படியும் அது சாடியது.

சீனாவின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எவ்வித செய்கைக்கும் தகுந்த, தேவையான பதில் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கம் எடுக்கும் எனவும் தூதரகம் குறிப்பிட்டது.

அனைத்துலக ரீதியில் அரிய கனிம வளங்கள் துறையில் சீனா செலுத்தும் ஆதிக்கத்தைப் போன்று செயற்கை நுண்ணறிவு, மனிதவடிவ இயந்திரத் துறையிலும் அந்நாடு அமெரிக்காவை மிஞ்சுவதைத் தடுக்கவே அமெரிக்க அதிகாரிகள் இத்தகைய செயல்பாடுகளில் இறங்கியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காசீனாமனிதன்கருவிஇறக்குமதிதடைபொருளியல்கனிமவளம்