ஊழியரணியைப் பாதியாகக் குறைக்கவிருக்கும் அமெரிக்கக் கல்வியமைச்சு

1 mins read
fe9ab62f-98ce-4a74-8181-fa274dbf6f74
அமெரிக்கக் கல்வியமைச்சு ஊழியர்களைப் பிரதிநிதிக்கும் தொழிற்சங்கம் அவர்களுக்காகப் போராடப்போவதாகத் தெரிவித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

அமெரிக்கக் கல்வியமைச்சு அதன் ஊழியர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேரை ஆட்குறைப்பு செய்யவிருப்பதாக (மார்ச் 11) அறிவித்துள்ளது.

இரண்டாவது முறை ஆட்குறைப்பு செய்வதற்கான திட்டத்தை நாளைக்குள் (மார்ச் 13) அரசாங்க அமைப்புகள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பிடம் சமர்ப்பிக்கவேண்டும்.

அதை முன்னிட்டு அமெரிக்கக் கல்வியமைச்சு அவசரமாக ஆட்குறைப்பு வேலைகளைச் செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட அமைச்சின் ஊழியர்கள் இம்மாதம் 21ஆம் தேதி வரை நிர்வாக விடுப்பில் வைக்கப்படுவர் என்று கல்வியமைச்சு சொன்னது.

ஆட்குறைப்பு மூலம் அமைச்சு இன்னும் திறம்பச் செயல்பட முடியும் என்று கல்வியமைச்சர் லிண்டா மெக்மஹோன் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் கல்விக் கட்டமைப்பைச் சீர்படுத்த இந்த ஆட்குறைப்பு ஒரு முக்கிய படி என்றார் அவர்.

இருப்பினும் கல்வியமைச்சு ஊழியர்களின் தொழிற்சங்கம் ஆட்குறைப்புச் செய்யப்பட்டோருக்காகத் தொடர்ந்து போராடவிருக்கிறது.

தொழிற்சங்கத்தில் 2,800க்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

சக அமெரிக்கர்களுக்குச் சேவையாற்ற தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த ஆயிரக்கணக்கான ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்வது அவர்களை அவமதிப்பதற்குச் சமம் என்று தொழிற்சங்கம் சாடியது.

அமெரிக்காவின் அனைத்து அரசாங்க அமைப்புகளும் நாளைக்குள் பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்வதற்கான திட்டத்தை முன்வைக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை மறுசீரமைக்கப்போவதாகத் திரு. டிரம்ப் பிரசாரத்தின்போது சொன்னதை நிறைவேற்றுகிறார்.

குறிப்புச் சொற்கள்