கோப்பன்ஹெகன்/வாஷிங்டன்: கிழக்கு கிரீன்லாந்தில் அமெரிக்கா இரண்டு புதிய ராணுவத் தளங்களைத் திறக்கத் திட்டமிடுகிறது.
இவ்விவகாரம் குறித்து தகவல் அறிந்த மூவர் அது குறித்த விவரங்களைத் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) செய்தி வெளியிட்டது.
முன்பு ரஷ்யாவுடன் நடந்த பனிப்போர் காலத்தில் கிரீன்லாந்தில் பயன்படுத்தப்பட்ட ராணுவத் தளங்களை மீண்டும் புதுப்பிப்பது அமெரிக்காவின் நோக்கம்.
அதன்படி, அங்கு கிழக்குக் கரையோரத்தில் தற்போது டென்மார்க்கின் பனியில் செயல்படும் நாய்கள் இழுக்கும் வாகனப் படை வளாகத்தில் அதன் தளத்தை அமைக்க அமெரிக்கா எண்ணம் கொண்டுள்ளது.
தளங்கள் அமையும் அந்த இரு இடங்கள் நர்சர்சுவாக், மெஸ்டர்ஸ்விக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது ஏறத்தாழ 30 பேருக்குமேல் மட்டுமே வாழும் இடம் என நர்சர்சுவாக்கின் மக்கள்தொகை வெகுவாகக் குறைந்துவிட்டது. அங்கு இயங்கிய ‘புளூவி வெஸ்ட் ஒன்’ எனப்பட்ட ராணுவத் தளத்தை 1950களில் அமெரிக்கா மூடியதே இதற்குக் காரணம்.
மெஸ்டர்ஸ்விக்கில்தான் டென்மார்க்கின் ‘சைரியஸ் டாக் ஸ்லெட் பெட்ரோல்’ என்ற நாய்கள் இயக்கும் சிறப்பு வாகனப் படை உள்ளது.
டென்மார்க், கிரீன்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் அதிகாரிகள் இந்த ஏற்பாட்டுக்கான புதிய ஒப்பந்தத்தை ஐக்கிய நாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் நேரப்படி காலை 10.30 மணிக்குக் கையெழுத்திடவிருந்தனர்.
ஒப்பந்தம் குறித்த முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை. டென்மார்க், கிரீன்லாந்து நாடுகளின் அரசாங்கங்கள் இதுவரை கருத்துரைக்கவில்லை.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும் எவ்விதத் தகவலையும் வெளியிடவில்லை.
