தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் உரிமையைப் பறித்த அமெரிக்க அரசு

2 mins read
60f5ac66-2e34-402f-a33f-705a098093eb
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 25 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டு மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் நிர்வாகம் மே 22ஆம் தேதி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்குக் கடும் நெருக்கடி கொடுத்துள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் உரிமையை அமெரிக்க அரசு பறித்துள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 25 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டு மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களில் பெரும்பாலானவர்கள் முழுக் கல்லூரி கட்டணத்தைச் செலுத்தும் மாணவர்கள். இதனால் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு நிதி வாரியாகவும் அடி விழுந்துள்ளது.

மேலும், தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற வேண்டும் என்றும் அல்லது அவர்களின் விசா ரத்து செய்யப்படும் என்றும் டிரம்ப் நிர்வாகம் மிரட்டல் விடுத்துள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை உரிமம் எப்படி ரத்து செய்யப்பட்டதோ அதேபோல் மேலும் சில பல்கலைக்கழகங்களின் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் டிரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் இந்த முடிவைக் கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது சட்டவிரோதமான நடவடிக்கை, இது பல்கலைக்கழகத்தையும் நாட்டையும் பாதிக்கும் என்று அவை கூறின.

அண்மைக் காலமாக ஹார்வர்ட் பலகலைக்கழகத்திற்கும் அதிபர் டிரம்ப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டுள்ளது.

பதற்றத்தில் மாணவர்கள்

அமெரிக்க அரசு ஹார்வர்ட் பலகலைக்கழகத்திற்குக் கொடுத்த நெருக்கடி சிங்கப்பூர் மாணவர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டு மாணவர்களுக்குப் பதற்றத்தைத் தந்துள்ளது.

ஹார்வர்ட் பலகலைக்கழகத்தில் 150க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தற்போது ஹார்வர்ட் பலகலைக்கழகத்தில் ஏறத்தாழ 6,800 வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் வேறு பலகலைக்கழகங்களுக்கு மாற வேண்டும் அல்லது சொந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

“ஹார்வர்டில் படித்துப் பட்டம் பெறுவது எனது கனவு. இந்தப் பலகலைக்கழகத்திற்குக் கடின உழைப்பால் தகுதிபெற்றேன். ஆனால் இப்போது பட்டம் பெறாமலே கனவு முடிந்துவிடுமோ என அச்சமாக உள்ளது. சக மாணவர்கள் ஆதரவாக உள்ளனர். மேல் விவரங்களுக்காகப் பதற்றத்துடன் காத்திருக்கிறேன்,” என்று சிங்கப்பூர் மாணவர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்