ஏவுகணை கட்டமைப்பைத் தொடர்ந்து பிலிப்பீன்சில் வைத்துள்ள அமெரிக்கா

ஏவுகணை கட்டமைப்பைத் தொடர்ந்து பிலிப்பீன்சில் வைத்துள்ள அமெரிக்கா

2 mins read
d3482958-b51a-4299-a818-11f6ef851a78
பிலிப்பீன்சில் உள்ள லாவோவாக் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து காணப்பட்ட ஏவுகணை முறை. - படம்: ராய்ட்டர்ஸ்

மணிலா: அமெரிக்கா, பிலிப்பீன்சில் வைத்துள்ள நடுநிலை தூரத்துக்கு ஏவுகணையைப் பாய்ச்சக்கூடிய ஏவுகணைக் கட்டமைப்பு முறை இப்போதைக்கு மீட்டுக்கொள்ளும் எண்ணத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா குரல் எழுப்பிவரும் வேளையில் அமெரிக்கா இந்த முடிவில் உள்ளது. அதோடு, வட்டார அளவில் பூசல் ஏற்பட்டால் அதில் அந்த ஏவுகணை முறை எவ்வளவு ஆக்ககரமாக இருக்கும் என்பதை அறிவதற்கான சோதனைகளை அமெரிக்கா மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தின் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் இவ்விவரங்களை வெளியிட்டனர்.

டைஃபன் என்ற அந்த ஏவுகணை அமைப்பைக் கொண்டு சீனாவின் இலக்குகளைத் தாக்க முடியும். கூட்டு ராணுவப் பயிற்சிகளில் பயன்படுத்துவதற்காக அது இவ்வாண்டு தொடக்கத்தில் பிலிப்பீன்சுக்குக் கொண்டு வரப்பட்டதாக பிலிப்பீன்சும் அமெரிக்காவும் தெரிவித்திருந்தன.

ஆனால் அந்த அமைப்பு தொடர்ந்து பிலிப்பீன்சில்தான் இருந்து வருகிறது.

தெற்குப் பகுதியில் தைவானின் அண்டை நாடான பிலிப்பீன்ஸ், ஆசிய கண்டத்தில் அமெரிக்கா பின்பற்றும் உத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒருவேளை சீனா தாக்குதல் நடத்தினால், தைவானுக்கு அமெரிக்கா ராணுவ உதவி வழங்க பிலிப்பீன்ஸ் நிகரற்ற தளமாக இருக்கும்.

இத்தகைய ஏவுகணை முறை இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். சீனாவும் ர‌ஷ்யாவும் அந்நடவடிக்கைக்கு எதிராக கண்டனம் தெரிவித்தன. வா‌ஷிங்டன், ஆயுத வலிமை தொடர்பிலான போட்டியைத் தூண்டிவிடுவதாகவும் அவை சாடின.

தென்சீனக் கடலின் சில பகுதிகளில் சீனாவுக்கும் பிலிப்பீன்சுக்கும் பதற்றநிலை இருந்து வருகிறது. உத்திபூர்வ நீர்ப்பாதையாகப் பார்க்கப்படும் தென்சீனக் கடற்பகுதியில் அவ்விரு நாட்டுப் படைகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில், ஏவுகணை முறை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த சில தகவல்கள் இதற்கு முன்பு வெளியிடப்படவில்லை.

லுஸோன் தீவின் வடக்குப் பகுதியில் உள்ள ஏவுகணை அமைப்பைக் கொண்டு பிலிப்பீன்ஸ், அமெரிக்கப் படைகள் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்சீனக் கடலை நோக்கியபடி அமைந்துள்ள வட லுஸோன், தைவான் நீரிணைக்கு அருகில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்