வாஷிங்டன்: ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தகவலுக்கு 25 மில்லியன் டாலர் (S$25.65 மில்லியன்) வெகுமதி அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவர டெஹ்ரான் ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக அதிபர் டோனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டம், ரகசியமான மாற்று இடத்தில் மேற்கொள்ளப்படுவதாக நம்பப்படுகிறது.
அமெரிக்க மத்திய தளபத்தியம் (சென்ட்காம்) எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரானின் அணுசக்தித் திட்டம், அதன் நிலையங்கள், உபகரணங்கள், அறிவியல் சமூகத்தினர் போன்ற தொடர்புடைய ஊழியர்கள் குறித்த தகவல்களை வழங்குவோருக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சின் நீதிக்கான வெகுமதிகள் வழங்கப்படும்,” என்று குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கர்களையும் அமெரிக்காவின் நலன்களையும் பாதுகாப்பதற்காக வெளியுறவு அமைச்சின் 1984ஆம் ஆண்டின் தேசிய பாதுகாப்பு திட்டத்தின்கீழ் இந்த வெகுமதித் திட்டம் உருவாக்கப்பட்டது.
“பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான கடமைகளில் அனைத்துலக அணுசக்தி அமைப்புடன் (ஐஏஇஏ) ஈரான் இணங்கிச் செயல்படாததால் அணுசக்தித் திட்டத்துக்கான முக்கிய உதிரிபாகங்களின் உற்பத்தி, இருப்பு குறித்த கண்காணிப்பை அந்த அமைப்பு மேற்கொள்ள முடியவில்லை,” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியது.
எத்தகைய தகவல்களுக்கு 20 மில்லியன் அமெரிக்க டாலர் வெகுமதி வழங்கப்படும் என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கப் படைகள் முழுமையாக அழித்துவிட்டதாக அதிபர் டிரம்ப் பலமுறை கூறியுள்ளார்.
நவம்பர் 6ஆம் தேதி இரவு புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் பேசிய திரு டிரம்ப், “நாங்கள் ஈரானைத் தாக்கியிருக்காவிட்டால் இன்று இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது, அவர்களிடம் அணுவாயுதம் இருந்திருந்தால், அவர்கள் அதை நிச்சயம் பயன்படுத்தியிருப்பார்கள், மத்திய கிழக்கு வட்டாரத்தை அடியோடு அழித்திருப்பார்கள்” என்றார்.
இருந்தாலும் எட்டு மாத காலப் போரில் பொருளாதாரமும் ராணுவமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஈரான், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக அதிபர் டிரம்ப் மேலும் தெரிவித்தார்.
