பிரிட்டனிலிருந்து போர் விமானங்களை அமெரிக்கா மீட்டுக்கொண்டது

பிரிட்டனிலிருந்து போர் விமானங்களை அமெரிக்கா மீட்டுக்கொண்டது

படம்: ராய்ட்டர்ஸ்

06 Oct 2026 - 6:05 pm

1 mins read

வாஷிங்டன்: பிரிட்டனின் ஃபேர்ஃபொர்ட் அரச விமானப் படைத் தளத்திலிருந்து அதன் போர் விமானங்களை அமெரிக்கா மீட்டுக்கொண்டுள்ளதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் திங்கட்கிழமை (அக்டோபர் 5) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அந்த விமானத் தளத்துக்கு ஏற்பட்டுள்ளதாக உளவுத் தகவல் கிடைத்ததன் விளைவாக அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சும் அத்தகவலை உறுதிப்படுத்தியது. பிரிட்டனின் விமானத் தளத்திலிருந்து 12 பி1எஸ் ரக போர் விமானங்கள் அமெரிக்காவில் உள்ள அதன் தளங்களுக்குத் திரும்பிவிட்டன.

ஈரான் பிரிட்டனில் உள்ள அமெரிக்கப் போர் விமானங்களை ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு குறிவைத்துத் தாக்கத் திட்டமிடுவதை உளவுத் துறை கண்டறிந்தபிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டன. அது குறித்து அதிபர் டிரம்ப் கருத்துரைக்க மறுத்துவிட்டார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த முழு விவரங்கள் அதிகாரபூர்வாக வெளியிடப்படவில்லை. ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தத் தொடங்கினால் பதில் நடவடிக்கையாக ஈரான் பிரிட்டனில் உள்ள அமெரிக்க விமானங்களைத் தாக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் என்ற சந்தேகத்தில் அவை அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்திகளைப் பரப்புகின்றன.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒருமுறை உக்ரேன் இதேபோன்று, ரஷ்யாவுக்குள் ட்ரோன்களை லாரிகளில் அங்கிருந்த ராணுவத் தளங்கள் அருகே கடத்திச் சென்று அதிரடி தாக்குதல் நடத்திய சம்பவத்தை அமெரிக்க ஊடகங்கள் சுட்டின. அப்போது லாரிகளை ஓட்டியோருக்கு எதை ரஷ்யாவுக்குள் ஏற்றிச் சென்றனர் என்பதே தெரியாது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காபிரிட்டன்போர் விமானம்போர்தாக்குதல்ட்ரோன்ட்ரோன் தாக்குதல்ஆளில்லா வானூர்திடோனல்ட் டிரம்ப்அதிபர்