மணிலா: அமெரிக்க அரசாங்கம், சூரியசக்தி ஆற்றல்கொண்ட நான்கு தானியக்கக் கண்காணிப்புக் கருவிகளைப் பிலிப்பீன்சுக்கு வழங்கியுள்ளது.
பிலிப்பீன்ஸ் ராணுவம் அதன் கடற்பகுதியைக் கண்காணிக்கவும் அச்சுறுத்தல்களை அடையாளம் காணவும் அந்தக் கருவிகள் வழங்கப்பட்டதாகப் பிலிப்பீன்சுக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்தது.
கடல் பரப்பிலும் கடலுக்கு அடியிலும் செல்லக்கூடிய ஓஷன் ஏரோ டிரைட்டன் என்ற அந்தக் கருவிகள், மனிதர்களின் துணையின்றி 30 நாள்கள்வரை தன்னிச்சையாக இயங்க முடியும்.
கிட்டத்தட்ட $13 மில்லியன் டாலர் மதிப்புள்ள அந்தக் கருவிகளை வழங்கியதன் மூலம் பிலிப்பீன்ஸுக்கு உதவுவதற்கான உறுதியை அமெரிக்கா முன்னிறுத்துவதாகத் தூதரகம் கூறியது.
மேலும், சட்டவிரோதமாக மீன்பிடிப்பது, பல்வேறு அச்சுறுத்தல்கள் ஆகிய கடல்துறைச் சவால்களைக் கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுப்பதற்கான பிலிப்பீன்சின் திறனையும் அந்தக் கருவிகள் மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
“பரந்த பரப்பளவைக் கொண்ட இந்தோ-பசிபிக் கடற்பகுதி தொடர்பில் பல்வேறு பூசல்கள் நிலவுகின்றன. பிலிப்பீன்ஸ் அதன் நடுவில் சிக்கிக்கொண்டுள்ளது,” என்று அமெரிக்கத் தூதரகம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
கடந்த மாதம் நடுப்பகுதியில் அமெரிக்க வீரர்களும் பிலிப்பீன்ஸ் வீரர்களும் தென் சீனக் கடலில் ஒருங்கிணைந்த ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டனர்.
சர்ச்சைக்குரிய ஸ்கார்பர ஷோல் பகுதியில் இருந்த மிதக்கும் கட்டமைப்பு ஒன்றை சீனா கடந்த வாரம் அகற்றியதாகப் பிலிப்பீன்ஸ் குறைகூறியது.
அந்தக் கட்டமைப்பு அறிவியல் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டதாக சீனா சொன்னது.
ஸ்கார்பர ஷோல் பகுதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் தனது அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் அது வலியுறுத்தியது.
ஆண்டுதோறும் $3 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான வர்த்தகத்தைக் கையாளும் ஒட்டுமொத்த தென் சீனக் கடலும் தனக்குத்தான் சொந்தம் என்று சீனா உரிமை பாராட்டிவருகிறது.

