தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கல்வித் துறை ஆட்குறைப்புக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

2 mins read
அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் 1,300க்கு மேற்பட்டோரைப் பணியிலிருந்து நீக்கக்கூடும்
1257b2f5-979f-4d7c-858f-e6e2f5b16245
அமெரிக்க உச்ச நீதிமன்ற உத்தரவு, அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகத்துக்குக் குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கருதப்படுகிறது. - படம்: த நியூயார்க் டைம்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் கல்வித் துறையில் ஆயிரத்துக்கு மேற்பட்டோரை ஆட்குறைப்பு செய்ய அந்நாட்டு உச்ச நீதிமன்றம், திங்கட்கிழமை (ஜூலை 14), அனுமதி வழங்கியுள்ளது.

அதிபர் நிர்வாகத்துக்கு இது குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கருதப்படுகிறது.

நாட்டின் பள்ளிகளில் மத்திய அரசின் பங்களிப்பைக் குறைக்க முற்படும் அதிபர் டிரம்ப்பின் முயற்சிக்கு இது சாதகமாக அமையக்கூடும்.

முன்னதாக அவரது நிர்வாகம், கல்வித் துறையில் 1,300க்கும் மேற்பட்டோரைப் பணி நீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்திருந்தது.

கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கடன்கள், மாணவர்களின் சாதனைகளைக் கண்காணித்தல், பள்ளிகளில் சிவில் உரிமைகளை அமல்படுத்துதல் ஆகிய பணிகளை நிர்வகிக்கும் கல்வித் துறையை முடக்கும் நடவடிக்கையாக அது பார்க்கப்பட்டது.

அமெரிக்கக் கல்வித் துறை, 4,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் கல்வி ஆண்டைத் தொடங்கியது.

அதிபர் நிர்வாகம், பணியிடத் தகுதிகாண் பருவத்திலிருந்த (Probationary workers) சிலரைப் பணி நீக்கம் செய்தது. மேலும், ஊழியர்கள் சிலருக்கு வேலையிலிருந்து விலகும் தெரிவை வழங்கியது.

ஒட்டுமொத்தத்தில் ஆட்குறைப்புக்குப் பிறகு, திரு டிரம்ப் இரண்டாம் தவணைக்கு அதிபராகப் பொறுப்பேற்றதற்குமுன் கல்வித் துறையில் இருந்த ஊழியர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் மட்டுமே வேலையில் நீடிப்பர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவு, நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஓர் அரசாங்கத் துறையின் உள்நிர்வாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுமதி இல்லாமலே தலையிட்டு, ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யுமளவு அதிபரின் அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டிருப்பதைப் பிரதிபலிப்பதாகக் கவனிப்பாளர்கள் சுட்டினர்.

கடந்த வாரம், வீடமைப்பு, நகர மேம்பாட்டுத் துறை, வெளியுறவுத் துறை, நிதித் துறை உட்படப் பல்வேறு மத்திய அரசாங்க அமைப்புகளில் ஆயிரக்கணக்கானோரை ஆட்குறைப்பு செய்ய நீதிபதிகள் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

கல்வித் துறை தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு கையெழுத்திடப்படாமல், காரணம் குறிப்பிடப்படாமல் வெளியிடப்பட்டது. அமெரிக்காவில் அவசரநிலை உத்தரவுகள் அவ்வாறு பிறப்பிக்கப்படுவது வழக்கம்.

டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் நீதிமன்றத்தின் உத்தரவைக் கொண்டாடினர். தமது சமூக ஊடகப் பதிவில் நீதிமன்றத்துக்கு நன்றி கூறிய திரு டிரம்ப், நாடு முழுவதுமுள்ள பெற்றோர்க்கும் மாணவர்களுக்கும் இது பெரிய வெற்றி என்று குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்