தைப்பே: அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்படக்கூடிய பொருளியல் ரீதியான தாக்கத்தைக் கையாளக் கூடுதலாக 10 பில்லியன் வெள்ளி நிதியுதவி வழங்கலாம் என்று தைவான் அதிபர் வியாழக்கிழமை (ஏப்ரல் 24) பரிந்துரைத்தார்.
சிறப்பு வரவு செலவுத் திட்டம் ஒன்றின்கீழ் அந்த நிதியை வழங்கலாம் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.
இரு வாரங்களுக்கு முன்பு தைவான் இறக்குமதிகள் மீது அமெரிக்கா 32 விழுக்காடு வரி விதிக்கவிருந்தது. பிறகு உலக நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கான வரிவிதிப்பை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் 90 நாள்களுக்கு ஒத்திவைத்ததைத் தொடர்ந்து தைவானுக்கான வரிவிதிப்பும் இப்போதைக்கு நடப்புக்கு வரவில்லை.
தைவானில் முதலில் அறிவிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மதிப்பு T$88 billion (2.71 பில்லியன் வெள்ளி). அது, T$410 பில்லியன் (12.61 பில்லியன் வெள்ளி) வரை அதிகரிக்கக்கூடும் என்று தைவானிய அதிபர் சோ ஜூங் தய் குறிப்பிட்டார்.
செய்தியாளர் கூட்டம் ஒன்றில் அவர் பேசினார். அத்திட்டத்தில் நிறுவனங்களுக்கான நிதியுதவி, வேலைச் சந்தையை நிலையாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகள், மின்சாரக் கட்டணங்களுக்கான சலுகைகள் போன்றவை அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிறப்பு வரவு செலவுத் திட்டத்தைச் செயல்படுத்த நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்படவேண்டும்.