வாஷிங்டன்: ஈரான் போர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்புக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே கருத்துவேறுபாடு அதிகரித்துள்ள நிலையில், நேட்டோ நட்பு நாடான ஜெர்மனியிலிருந்து 5,000 படைகளைத் திரும்பப் பெறப்போவதாக பென்டகன் வெள்ளிக்கிழமை (மே 1) அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, “ஐரோப்பிய நாடுகள் இனி தங்களது தற்காப்பிற்கு தாங்களே அதிக பொறுப்பேற்க வேண்டும்,” என்று ஜெர்மனின் தற்காப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் சனிக்கிழமை (மே 2) கூறியுள்ளார்.
ஜெர்மனி தனது ராணுவத்தை விரிவுபடுத்துதல், தளவாடங்களை விரைவாகக் கொள்முதல் செய்தல் போன்றவற்றின் மூலம் சரியான பாதையில் செல்வதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது ஜெர்மனியில் கிட்டத்தட்ட 40,000 அமெரிக்க வீரர்கள் இருப்பதாகவும், அவர்களின் இருப்பு அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய இரு நாடுகளின் நலன்களுக்கும் அவசியமானது என்றும் அவர் சொன்னார்.
எனினும், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா தனது படைகளைத் திரும்பப் பெறுவது எதிர்பார்க்கக்கூடியது என்றும் பிஸ்டோரியஸ் சுட்டிக்காட்டினார்.
ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் ஈரான், அமெரிக்காவை அவமானப்படுத்துவதாகவும், போரை முடிவுக்குக் கொண்டுவர வாஷிங்டனிடம் முறையான திட்டம் இல்லை என்றும் ஏப்ரல் 27ஆம் தேதி விமர்சித்திருந்தார்.
மெர்ஸின் கருத்துகளுக்கு எதிர்வினையாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பென்டகன் அதிகாரி தெரிவித்தார்.
அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் போர் வீரர்கள் நாடு திரும்பிவிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஈரான் போரில் ஆதரவளிக்காத நட்பு நாடுகளைத் தண்டிக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ஸ்பெயின் மீது வணிகத் தடையை விதிக்கவும், இத்தாலியிலிருந்து படைகளைத் திரும்பப் பெறவும் டிரம்ப் பரிசீலித்து வருகிறார். குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க நேட்டோ நாடுகள் கடற்படைகளை அனுப்பாதது டிரம்பிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டனின் கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு, ஜெர்மனி உள்ளிட்ட நேட்டோ நாடுகள் தங்கள் தற்காப்பைப் பலப்படுத்த உறுதிபூண்டுள்ளன.
எனினும், நிதி நெருக்கடி, ராணுவத் திறன்களில் காணப்படும் இடைவெளி போன்றவை காரணமாக, ஐரோப்பா தனது தற்காப்புத் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பதே தற்போதைய யதார்த்தம்.

