ஹனோய்: கடந்த வாரம் மத்திய வியட்னாமில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 35ஐ எட்டியுள்ளது. மேலும் ஐவரைக் காணவில்லை என்று வியட்னாம் பேரிடர் முகவையின் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) தெரிவித்துள்ளனர்.
வியட்னாமின் கரையோர மாவட்டங்களில் அக்டோபர் 26, 27 ஆகிய இரு தேதிகளில் 24 மணிநேரத்துக்கும் மேலாக வரலாறு காணாத வகையில் 1.7 மீட்டர் அளவு கடும் மழை கொட்டித்தீர்த்தது.
ஹுய், லம்டொங், குவாங் டிரி ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி, அப்பகுதிகளில் 35 மரணங்கள் நிகழ்ந்தன என்று வியட்னாம் பேரிடர், வெள்ள நிர்வாக ஆணையம் (VDDMA) அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலக மரபுடைமைச் சின்னமாக (யுனேஸ்கோ) அடையாளம் காணப்பட்ட ஹொய் அன் எனப்படும் பண்டைய நகரம், இடுப்பளவு வெள்ளத்தில் தத்தளிக்கிறது. அறுபது ஆண்டுகளில் நடந்திராத வகையில், அருகே உள்ள முக்கிய ஆறு கரைபுரண்டதால் மக்கள் அங்கு மரப்படகுகளில் நகர்ந்து வருகின்றனர்.
சுமார் 16,500 வீடுகள் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளன. மேலும் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகளும் கோழி போன்ற பறவைகளும் கிராமங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அவற்றோடு 5,300 ஹெக்டர் அளவு விவசாய நிலங்கள் மூழ்கிவிட்டன.
இதுவரையில் 100,000 வீடுகள் மூழ்கிவிட்டதாகவும், 150 இடங்களில் நிலம் சரிந்ததாகவும் வியட்னாமின் சுற்றுச்சூழல் அமைச்சு கடந்த வாரம் அறிவித்துள்ளது.
சராசரியாக ஓர் ஆண்டில் உள்நாட்டிலும் கடலுக்கு அப்பாலும் 10 சூறாவளிகள் வியட்னாமில் ஏற்பட்டாலும் இவ்வாண்டின் முற்பாதியில் மட்டும் 12 புயல், பெருமழை சார்ந்த பேரிடர்களை அந்நாடு சந்தித்துவிட்டது.
இயற்கைப் பேரிடர், நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றால் வியட்னாமில் இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 187 பேர் மாண்டுவிட்டனர் அல்லது காணமற்போய்விட்டனர் என்று அறியப்படுகிறது. மேலும் $793.93 மில்லியனுக்கு மேல் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அரசாங்கப் புள்ளிவிவரங்கள் குறிப்பிட்டுள்ளன.


