மலேசியாவின் தரவுப் பாதுகாப்புக் குறைகூறலை ‘வேஸ்’ செயலி மறுக்கிறது

மலேசியாவின் தரவுப் பாதுகாப்புக் குறைகூறலை ‘வேஸ்’ செயலி மறுக்கிறது

படம்: ஏஎஃப்பி

23 Oct 2026 - 5:00 pm

2 mins read

கோலாலம்பூர் : இஸ்ரேலியத் தொடர்புகள் காரணமாக மலேசிய அரசு ஊழியர்கள் ‘வேஸ்’ (Waze) வழிகாட்டல் செயலியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மலேசியா கூறிய குற்றச்சாட்டுகளை ‘வேஸ்’ மறுத்துள்ளது.

‘வேஸ்’ செயலி, கூகல் நிறுவனத்துக்குச் சொந்தமானது. இஸ்ரேலில் தொடங்கப்பட்ட அந்தச் செயலி அங்குp பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இயங்கி வருகிறது.

அரசாங்கத் தகவல்கள் மற்றும் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் இஸ்ரேலிய அரசாங்கத்தால் தவறாகப் பயன்படுத்தப்படும் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்காக. அரசு ஊழியர்களுக்கான ‘வேஸ்’ செயலித் தடையை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கடந்த புதன்கிழமை (அக்டோபர் 21) அறிவித்தார்.

இந்நிலையில், “வேஸ் செயலி உணர்வுபூர்வமான அரசாங்கத் தகவல்களைச் சேகரிக்கிறது அல்லது பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை எந்த ஓர் அமைப்பும் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது என்ற கூற்றுகள் முற்றிலும் பொய்யானவை,” என்று ‘வேஸ்’ பேச்சாளர் ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திற்கு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“பயனர்களின் தரவுகளைப் பாதுகாக்கும் உலகளாவிய சட்டபூர்வ தரவுப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்ட கடுமையான தனியுரிமைக் கொள்கைகளின் கீழேயே வேஸ் இயங்குகிறது,” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் மின்னிலக்கத்துறை அமைச்சர் கோபிந்த் சிங் தியோ புதன்கிழமை (அக்டோபர் 22) நாடாளுமன்றத்தில் பேசுகையில், வேஸ் செயலித் தடை அதிகாரபூர்வப் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெளிவுபடுத்தினார்.

இகற்கிடையே, மலேசியாவில் வேஸ் செயலியின் பயன்பாட்டை முழுமையாகத் தடை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் நிராகரிக்கவில்லை. நடப்பில் உள்ள மாற்றுச் செயலிகள் வேஸ்க்குப் பதிலாக போதுமான ஆற்றலைக் கொண்டிருந்தால், இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

‘’மாற்று வழிகள் என்னவென்று நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். நாளை நமது ஆற்றல் போதுமானதாக இருப்பதை நாம் கண்டால், அதை முற்றிலுமாகத் தடை செய்வது சாத்தியமாகலாம்,’’ என்றார் அவர்.

குறிப்பாக, பொதுச் சேவைத் துறை ஊழியர்களுக்கு வேஸ் செயலியின் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து, பொதுமக்களும் உள்ளூர் செயலிகளைப் பயன்படுத்தத் தொடங்குமாறு பிரதமர் பரிந்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்
தரவுமலேசியாசெயலி