வீட்டிலிருந்து வேலை; இயல்பாகக் காணப்படும் மலேசிய அரசுத் துறைகள்

வீட்டிலிருந்து வேலை; இயல்பாகக் காணப்படும் மலேசிய அரசுத் துறைகள்

1 mins read
1d0de180-2c98-45cd-9eed-0bf3df816f76
புத்ராஜெயா. - படம்: ஸ்டெஃபன் ஃபுசான் / ஃபிளிக்ஆர்

கோலாலம்பூர்: மலேசியாவில் மத்திய அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை புதன்கிழமை (ஏப்ரல் 15) நடப்புக்கு வந்தது; இந்நிலையில் அந்நாட்டில் அரசாங்கச் சேவைகள் இயல்பான முறையில் சுமுகமாக இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முகவைகளில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு (counter transactions) இது பொருந்தும்.

பெரும்பாலான மத்திய அரசாங்கக் கட்டடங்களிலும் வளாகங்களிலும் குறைந்தபட்ச எண்ணிக்கையில்தான் ஊழியர்கள் செயல்பட்டனர். இருந்தாலும், முகவைச் சேவைகள் சுமுகமாக இடம்பெற்றன. குடிநுழைவு, காவல்துறைச் சேவைகள் உள்ளிட்டவையும் அவற்றில் அடங்கும்.

மத்திய அரசாங்கச் செயல்பாடுகளுக்குத் தலைநகரான புத்ராஜெயா குறிப்பிடத்தக்க அளவு அமைதியாகக் காட்சியளித்தது. பெரும்பாலான அமைச்சுகளைச் சேர்ந்த அரசாங்க ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி வேலை செய்வது அதற்குக் காரணம்.

எரிசக்தி நெருக்கடியைச் சமாயிக்க மின்சாரப் பயன்பாடு குறைவு

பெரும்பாலான அரசாங்கக் கட்டடங்களில் மின்சாரம் குறைவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில் விளக்குகள் குறைவான வெளிச்சத்துடன் இயக்கப்படுவதுடன் பாதி மின்தூக்கிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

மத்திய கிழக்குப் பூசல் காரணமாக உலகளவில் ஏற்பட்டிருக்கும் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கும் நோக்கில் மலேசிய மத்திய அரசித் துறை ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தபடி வேலை செய்யும் நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கை, புத்ராஜெயா, கோலாலம்பூர், சிலாங்கூர் பகுதிகளிலும் மாநிலத் தலைநகரங்களிலும் வேலையிடத்திலிருந்து எட்டு கிலோமீட்டருக்கும் அதிக தொலைவில் வாழும் அரசாங்க ஊழியர்களுக்குப் பொருந்தும்.

குறிப்புச் சொற்கள்