ஈரானின் கார்க் தீவை டிரம்ப் குறிவைப்பது ஏன்?

ஈரானின் கார்க் தீவை டிரம்ப் குறிவைப்பது ஏன்?

2 mins read
2924cee9-b3c0-4d30-a938-b39eae367bad
ஈரான் பெருநிலத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கார்க் தீவு. - படம்: ஏஎஃப்பி

டெஹ்ரான்: ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி, பாரசீக வளைகுடாவில் உள்ள கார்க் தீவையை முழுமையாகச் சார்ந்துள்ளது.

ஈரான் பெருநிலத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்தீவு, அந்நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஏறக்குறைய 90 விழுக்காட்டைக் கையாளும் முக்கியத் தளமாகும்.

ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியபோதிலும், எண்ணெய் ஏற்றுமதி பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல பிற நாட்டுக் கப்பல்களுக்குத் தடைவிதித்து, தனது சொந்த கப்பல்கள் செல்ல ஈரான் தொடர்ந்து அனுமதிப்பதே இதற்கு முக்கியக் காரணம்.

ஏற்கெனவே அப்பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்தாலும், மார்ச் நடுப்பகுதியில் அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சு ஈரானின் ராணுவ நிலைகளை மட்டுமே குறிவைத்தது. இதில், எண்ணெய் உள்கட்டமைப்புக்குப் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்நிலையில், ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறிக்கொண்டே, அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி மையத்தைக் கைப்பற்றப்போவதாக அல்லது அதனை ‘அடியோடு அழிக்கப்போவதாக’ அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சூசகமாகக் கூறியுள்ளார்.

இவ்விரு நடவடிக்கைகள் எதுவாயினும், போரை அடுத்தகட்டத்திற்கு இட்டுச்செல்லும். குறிப்பாக, தரைவழித் தாக்குதல் என்பது அமெரிக்காவிற்கு அதிக உயிரிழப்புகளையும் கடும் சவால்களையும் ஏற்படுத்தக்கூடும்.

மார்ச் 14ஆம் தேதி, அமெரிக்கத் தாக்குதலில் கார்க் தீவு சேதமுற்றதைக் காட்டும் துணைக்கோள் படம்.
மார்ச் 14ஆம் தேதி, அமெரிக்கத் தாக்குதலில் கார்க் தீவு சேதமுற்றதைக் காட்டும் துணைக்கோள் படம். - படம்: ராய்ட்டர்ஸ்

கார்க் தீவு மீதான படையெடுப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

மத்திய கிழக்கிற்கு அமெரிக்கா ஆயிரக்கணக்கான கூடுதல் வீரர்களை அனுப்பி வருவதால், தரைவழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற ஊகம் வலுத்துள்ளது.

கார்க் தீவின் எண்ணெய் வசதிகளைக் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால், ஈரானின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியையும் முடக்க முடியும். இது பல ஆண்டுகளாகத் தடைகளால் தத்தளித்து வரும் ஈரானியப் பொருளியலுக்குப் பேரிடியாக அமையும். மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க ஈரானை வற்புறுத்த அமெரிக்காவுக்கு இது ஒரு வாய்ப்பாகவும் அமையும்.

ஈரானுக்குப் பிற எண்ணெய் ஏற்றுமதி முனையங்கள் இருந்தாலும், நாளொன்றுக்கு 1.5 மில்லியன் பீப்பாய் எண்ணெய்யைக் கையாளும் கார்க் தீவின் திறனுக்கு ஈடாக எதுவும் இல்லை. ஹோர்முஸ் நீரிணையைச் சாராமல் இருப்பதற்காக ஜாஸ்க் முனையம் அமைக்கப்பட்ட போதிலும், 2021ல் திறக்கப்பட்டதிலிருந்து அங்கிருந்து வெறும் ஐந்து கப்பல்களே அனுப்பப்பட்டுள்ளன.

படையெடுப்பில் உள்ள அபாயங்கள் என்ன?

கார்க் தீவைக் கைப்பற்ற முயல்வது அமெரிக்கப் படைகளுக்குப் பேராபத்தை விளைவிக்கும். அதோடு, அங்கு பணியாற்றும் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் உயிரிழக்கும் சாத்தியம் நிலவும்.

ஈரானிய மண்ணில் தரைவழித் தாக்குதலைத் தொடங்குவது, வான்வழித் தாக்குதலுடன் நிலவிவரும் போரை விரிவுபடுத்தி, அமெரிக்காவை நீண்டகாலப் போரில் சிக்கவைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

கார்க் தீவை ‘மிக எளிதாக’ கைப்பற்ற முடியும் என்று திரு டிரம்ப் கூறினாலும், அந்தத் தீவைச் சென்றடைவதே பெரும் சவாலாக இருக்கும்.

பாரசீக வளைகுடாவின் வடக்கு மூலையில் கார்க் தீவு அமைந்துள்ளதால், அமெரிக்கப் படைகள் ஹோர்முஸ் நீரிணையைத் தாண்டிச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது ஈரானியக் கரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள், ஆளில்லா வானூர்திகளின் தாக்குதலுக்கும் கண்ணிவெடிகளுக்கும் அமெரிக்கக் கப்பல்களும் விமானங்களும் இலக்காகக்கூடும்.

குறிப்புச் சொற்கள்