வாஷிங்டன்: டிரம்ப் நிர்வாகத்திலிருந்து வெளியேறி, வரும் 2028 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக வெளியான செய்திகளை அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மறுத்துள்ளார்.
மேலும், தமது அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கும் திரு ரூபியோ பதிலளிக்க மறுத்துவிட்டார்.
“அதிபர் டிரம்ப்பின் பதவிக்காலம் முடியும் வரை அவருக்காகப் பணியாற்றுவதே எனது திட்டம். எனது பணியை மிகவும் நேசிக்கிறேன்,” என்று அவர் நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகவும் உள்ள அமைச்சர் ரூபியோ, 2028 தேர்தல் குறித்து இனி பேசப்போவதில்லை என்று தெரிவித்தார்.
“துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அதிபராகப் போட்டியிட்டால், ஒரு சிறந்த வேட்பாளராக இருப்பார். அவருக்கு ஆதரவு தெரிவிப்பேன்,” என்றும் திரு ரூபியோ கடந்த மே மாதத்தில் கூறியிருந்தார்.
இதனிடையே, நவம்பர் 4ஆம் தேதி சமூக ஊடகத்தில் விரிவாகப் பதிவிட்ட திரு வான்ஸ், குடியரசுக் கட்சியின் தேர்தல் பின்னடைவுக்கு ஈரானுடனான போர் மற்றும் இஸ்ரேல் தொடர்பான அரசின் கொள்கைகளே காரணம் என விமர்சித்திருந்தார்.
துணை அதிபர் வான்ஸின் கருத்துகள் குறித்துக் கேட்டபோது, தாம் உள்நாட்டு அரசியலில் அதிகம் ஈடுபடவில்லை எனத் திரு ரூபியோ மழுப்பலாகப் பதிலுரைத்தார்.
