உலகப் பருவநிலை மாநாடு: அதிபர் டிரம்ப்பை வசைபாடிய தலைவர்கள்

2 mins read
62867cd7-cf31-42a3-a94c-88f5c606aa91
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல பருவநிலை மாநாடுகள் நடந்தும் கரிம வெளியேற்றம் மூன்றில் ஒரு பங்கு கூடியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

உலக நாடுகளுக்கு இடையிலான 30ஆம் பருவநிலை மாநாடு (COP30) பிரேசிலின் பெல்லிம் நகரில் நவம்பர் 10 முதல் 21ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.

அமேசான் காடுகளுக்கு அருகே அமைந்துள்ள பெல்லிம் நகர், பருவநிலைக்கு அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மழைக்காடுகளின் தனித்தன்மையை உணர்த்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.

மாநாட்டின் முன்னோடியாக நாடுகளின் தலைவர்களுக்கு மட்டுமான சந்திப்புக் கூட்டம் வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் (நவம்பர் 6, 7ஆம் தேதி) இரண்டு நாள்கள் நடந்தன.

அக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உலகின் பருவநிலை மேம்பாட்டுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கையை பெரும்பாலான தலைவர்கள் குறைகூறியுள்ளனர்.

மாநாட்டில் அதிபர் டிரம்ப் கலந்துகொள்ளவில்லை. இருந்தாலும், செப்டம்பர் மாதம் ஐக்கிய நாட்டு சபையில் பருவநிலை மாற்றம் என்பது உலகை ஏமாற்றும் செயல் என்று அவர் கூறியிருந்தது மாநாட்டில் எதிரொலித்தது.

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், உலகளாவிய பருவநிலை மாற்ற இயக்கத்துக்கு பல நாடுகளின் ஆதரவு குறைவதாக வருத்தம் தெரிவித்தார்.

இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. அடுத்த இரு வாரங்கள் பருவநிலை மாற்றம் சார்ந்த புதிய திட்டங்கள் முன்மொழியப்படும். குறிப்பாக மழைக்காடுகளைப் பாதுகாப்பதற்கான நிதியில் கவனம் செலுத்தப்படும்.

அமெரிக்க அதிபரை நேரடியாக குறிப்பிடாமல், “தீவிரவாத சக்திகள், பொய்ச் செய்திகளை பரப்பி வருகின்றன,” என்று பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா கூறினார். “அச்செயலினால் வருங்கால தலைமுறைகளின் வாழ்க்கை பூமியின் வெப்பத்தால் நிரந்தரமாக பாதிப்படையும்,” எனவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் பொய் சொல்கிறார் என்று சிலி மற்றும் கொலம்பியா நாடுகளின் பிரதிநிதிகள் நேரடியாகவே குற்றஞ்சாட்டினர்.

மாநாட்டில் கலந்துகொண்டோருக்கு அமெரிக்க அதிபரை வசைபாடுவது எளிதாக இருந்தாலும் அங்கு புதிய நடவடிக்கைகளுக்கான நடைமுறைகளை வகுப்பது எளிதல்ல.

புவியின் வெப்பநிலை அதிகரிப்புக்கு முக்கியக் காரணமான கரிம வெளியேற்றத்துக்கான புதிய திட்டங்களைப் பல நாடுகள் சமர்ப்பிக்கவே இல்லை. மேலும், உலக மழைக்காடுகளைப் பாதுகாக்க வழங்கவிருந்த $125 பில்லியன் திட்டத்திலிருந்து பிரிட்டன் பின்வாங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்